தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கவிருக்கும் கனமழை.! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா.?

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கேரளா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று (23.06.2021) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் இன்று பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாளை முதல் 26-ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.