தமிழகம் மருத்துவம்

62 முறை டயாலிசிஸ் மேற்கொண்ட 18 வயது இளைஞருக்கு கொரோனா! கைவிரித்த தனியார் மருத்துவமனை! சாதித்து காட்டிய புதுக்கோட்டை அரசு மருத்துவமனை!

Summary:

Pudukottai govt hospital doctors saved young boy

புதுக்கோட்டை மாவட்டம் காட்டுபாவா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவரின் மகன் மகேஷ் வில்லியம்ஸ். 18 வயதான இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

18 வயது நிரம்பிய சிறுவன், இதுவரை 62 முறை டயாலிசிஸ் செய்து கொண்டுள்ளார். விவசாய குடும்பத்தை சேர்ந்த மகேஷ் வில்லியம்ஸ் டயாலிசிஸ் செய்வதற்கு கடன் வாங்கி இதுவரை வைத்தியம் பார்த்துள்ளார்.

இந்நிலையில் மகேஷ் வில்லியம்ஸ்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் கொரோனா தொற்று ஏற்பட்ட நபர்களுக்கு தங்களுடைய மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்ய முடியாது என்றும் எனவே புதுக்கோட்டை மாவட்ட மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறியுள்ளனர்.

இதனையடுத்து அவரை அவரது குடும்பத்தினர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு, சிகிச்சை பெற்று வந்த மகேஷ் வில்லியம்ஸ் தற்பொழுது தொற்று இல்லாத இளைஞராக மாறி வீடு திரும்பியுள்ளார். 

அந்த இளைஞருக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் புதிய டயாலிசிஸ் மிஷினை வரவழைத்து அதன் மூலம் இளைஞரின் உயிரை காப்பாற்றிய சம்பவம் அவரது குடும்பத்தினரை நெகிழ வைத்துள்ளது. இதனையறிந்த பொதுமக்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவனையில் பணிபுரியும் ஊழியர்களை பாராட்டி வருகின்றனர். 


Advertisement