பங்குசந்தை முதலீடு நஷ்டம்... பி.எச்.டி எகனாமிக்ஸ் மாணவர் தூக்கிட்டு உயிரை மாய்த்த பரிதாபம்.! Pondicherry University Economics PHD Student Suicide due to Share Market Investment Loss

தூத்துக்குடி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் ஸ்ரீதர். இவர் தனது குடும்பத்தாருடன் மதுரையில் தற்போது வசித்து வருகிறார். ஸ்ரீதரின் மகன் பிரவீன் டேனியல் (வயது 31). புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பிள்ளைச்சாவடி அன்னை நகர் வீதியில் உள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்து, பிரவீன் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி பொருளாதார பிரிவு பயின்று வருகிறார். 

கடந்த 2 நாட்களாக பிரவீனின் அறைக்கதவு திறக்கப்படாமல், துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் காலாப்பட்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது, பிரவீன் டேனியல் தூக்கில் அழுகிய நிலையில் பிணமாக தொங்கியுள்ளார். 

Pondicherry

அவரின் உடலை மீட்ட அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், அறையில் நடத்திய சோதனையில் மேஜையில் தனது பெற்றோரின் எண்ணை எழுதி வைத்துள்ளார். அந்த அலைபேசி எண் மூலமாக அவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் பிரவீன் டேனியல் பங்குச்சந்தை முதலீட்டில் ஆர்வம் கொண்டவர் என்பது உறுதியானது. மேலும், பங்குசந்தையில் இலட்சக்கணக்கில் முதலீடு செய்திருந்த நிலையில், அதில் ஏற்பட்ட திடீர் நஷ்டத்தால் மனமுடைந்து தற்கொலை செய்தது அம்பலமானது. விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.