புதுக்கோட்டையில் தலைமை காவலர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை.! என்ன காரணம்.?
புதுக்கோட்டையில் தலைமை காவலர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை.! என்ன காரணம்.?

தமிழகத்தில் காவலர்கள் தற்கொலைகள் தொடர்ந்து வருகிறது. மன உளைச்சலால் காவலர்கள் தற்கொலை செய்துக்கொள்வது அதிகரித்து வருகிறது. ஸ்காட்லாண்டு யார்டு போலீஸுக்கு அடுத்ததாகச் சொல்லப்படுவது தமிழகக் காவல்துறை. மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு காவல்துறையின் பங்களிப்பு மிக அவசியம். ஆனால், காவலர்களே மனநிம்மதியில்லாமல் தற்கொலை செய்துகொள்வது பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஆண்டுக்குச் சராசரியாக 27 காவலர்கள் தற்கொலைசெய்துகொள்வதாக தேசியக் குற்றப்பதிவு ஆணையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. பணிச்சுமையும், உயரதிகாரிகளின் நெருக்கடிகளும்தாம் காரணம் என்று ஒவ்வொரு முறையும் கூறப்படுகிறது. சரியான தூக்கமின்மை, விடுமுறை கிடைக்காதது, விடுமுறை கிடைத்தாலும் அதிகாரிகள் அழைத்தால் பணிக்கு வரவேண்டிய சூழ்நிலை போன்ற நெருக்கடிகளால் காவலர்கள் மனச்சோர்வுக்கு ஆளாகின்றனர்.
இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் கண்ணன் என்பவர் இன்று காலை ரயில் முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பணி சுமையால் இந்த முடிவை எடுத்தாரா? அல்லது அவரது வீட்டில் குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டாரா? என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.