தமிழகம்

இரவு நேரத்தில் மயானத்தில் கேட்ட அலறல் சத்தம்..! கூடுதல் எலும்புகள்..! விசாரைணயில் வெளியாகும் பல திடுக்கிடும் உண்மைகள்.!

Summary:

Mysterious in Kallakurichi nursing student suicide case

ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதற்காக தனது சகோதரிகளுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தற்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேட்டுநன்‌னாவரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயியான இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். அதில் முதல் மகள் நித்யஸ்ரீ. அந்த பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரி ஒன்றில் படித்து வந்த நித்யஸ்ரீ ஆன்லைன் வகுப்பில் படிப்பதற்காக ஸ்மார்ட் போனை கேட்டபோது தனது சகோதரிகளுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தற்கொலை செய்து கொண்டார். 

வீட்டில் ஒரு ஸ்மார்ட்போன் மட்டுமே இருந்ததாக கூறப்படும் நிலையில் நித்யஸ்ரீ மற்றும் அவரது இரண்டு சகோதரிகளுக்கும் ஏற்பட்ட பிரச்சனையே நித்யஸ்ரீயின் தற்கொலைக்கு காரணம் என கூறப்பட்டது. 

இதனை அடுத்து நித்தியஸ்ரீயின் உடல் அவரது கிராமத்தில் உள்ள மயானத்தில் எரியூட்டப்பட்டது. இந்நிலையில் மாணவி எரியூட்டப்பட்ட அதே இடத்தில் கூடுதல் மனித எலும்புகள் மற்றும் கைகடிகாரம், செல்போன் உதிரிபாகங்கள் ஆகியவை கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக அந்த பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தனர். 

 மேலும் மாணவி எரியூட்டப்பட்ட அன்று இரவு அதே பகுதியில் இளைஞர் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டதாகவும் அந்த பகுதி மக்கள் போலீசாரிடம் தெரிவித்து இருந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் அங்கிருந்த எலும்புகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். 

இதனிடையே தனது மகன் ராமுவை காணவில்லை என மேட்டாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் காணாமல் போனதாக கூறப்படும் ராமு செல்போன் பிரச்சனை காரணமாக உயிரிழந்த நித்யஸ்ரீயை ஒருதலையாக காதலித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

மேலும் உயிரிழந்த மாணவியின் உடல் எரியூட்டப்பட்ட அதே பகுதியில் ராமு அன்று இரவு சுற்றி வந்ததாகவும், மாணவியின் உடலை எரியூட்டிவிட்டு அனைவரும் அங்கிருந்து சென்றநிலையில் அன்று இரவுதான் இளைஞர் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டதாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

ராமு நித்யஸ்ரீயை ஒருதலையாக காதலித்துவந்தாலும், அவர் இறந்த செய்தியை தாங்க முடியாமல் அவரும் அதே தீயில் விழுந்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனிடையே வீட்டில் ஒரு ஸ்மார்ட் போன் மட்டுமே இருந்ததாகவும், அதனால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகத்தான் நித்தியஸ்ரீ தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்பட்டநிலையில் அவர்கள் வீட்டில் நான்கு ஸ்மார்ட் போன் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

இந்த தகவல் தற்போது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இந்த வழக்கு குறித்து முழுமையான விசாரணை முடிந்த பின்னரே முழுமையான தகவல் கிடைக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


Advertisement