இந்தியா

மத்திய அமைச்சரின் கார் விபத்து.! அமைச்சரின் மனைவி பலி.!

Summary:

மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்கின் மனைவியும் அவரது நெருங்கிய உதவியாளரும் சாலை விபத்தில் பலியனார்கள்.

மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சரும், கோவா வடக்கு தொகுதி பாஜக எம்.பி.யுமான ஸ்ரீபாத் நாயக், தனது மனைவி விஜயா நாயக், அவரது உதவியாளர் உள்ளிட்ட 4 போ் கோவாவில் இருந்து கர்நாடகாவுக்கு சென்றுள்ளனா். நேற்றிரவு எல்லாப்பூரில் இருந்து கோகா்ணாவுக்கு காரில் புறப்பட்டுள்ளனர்.

அப்போது அங்கோலா வட்டம், ஹொசகம்பி கிராமத்தில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் திடீரெனக் கவிழ்ந்துள்ளது. இதில் காரில் பயணித்தவர்கள் படுகாயமடைந்தனர். மத்திய இணையமைச்சா் ஸ்ரீபாத் நாயக் உள்ளிட்ட 2 பேருக்கு மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

அமைச்சரின் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த அமைச்சரின் உதவியாளரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்கின் மனைவி விஜய நாயக்கின் மறைவுக்கு கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா இரங்கல் தெரிவித்துள்ளார் என  கர்நாடக முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.


Advertisement