தமிழகம்

நெஞ்சு பதறுது!! லிப்டு கேட்டு வந்தது ஒரு குத்தமா!! பைக்கில் லிப்டு கேட்டு வந்தவரை அடித்தே கொலை செய்த 19 வயது இளைஞர்..

Summary:

பைக்கில் லிப்டு கேட்டு வந்தவர் பணம் தராததால் அவரை அடித்து கொலை செய்த இளைஞரை போலீசார் கைது

பைக்கில் லிப்டு கேட்டு வந்தவர் பணம் தராததால் அவரை அடித்து கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை கொளத்தூரில் கடந்த வாரம் அடையாளம் தெரியாத ஒருவர் சாலை ஓரமாக இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு விசாரணையை தொடங்கினர்.

இறந்து கிடந்தவர் தலையின் பின்புறம் அடிபட்டு இரத்தம் வெளியேறி இறந்துகிடந்ததால் சாலை விபத்தா? அல்லது யாராவது தாக்கினார்களா? அல்லது அவரே தானாக கீழே விழுந்ததால் இறந்துவிட்டாரா? என பலகோணத்தில் போலீசார் விசாரித்தனர். மேலும் இறந்தவர் யார் என போலீசார் விசாரித்ததில், அந்த நபர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் (47) என்பதும், கொளத்தூரில் உள்ள உறவினரின் வீட்டிற்கு வந்ததும் தெரியவந்தது.

இதனை அடுத்து போலீசார் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தபோது, இறந்துகிடந்த நபர் யாரோ ஒருவருடன் பைக்கில் வந்து இறங்குவதும், பின்னர் அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட, பைக்கை ஓட்டிவந்த நபர் சங்கரை கீழே தள்ளிவிட்டு அடிப்பதும் போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது.

மேலும் சங்கர் கீழே விழுந்ததும் பைக்கை ஓட்டிவந்த நபர் பைக்கில் ஏறுவதும், பின்னர் சங்கர் அருகில் வந்து பார்ப்பதும், பின்னர் சங்கரின் சட்டை பையில் இருந்து எதையோ எடுத்துக்கொண்டு செல்வதும் சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்தது.

இந்த காட்சிகளை ஆதாரமாக கொண்டு, போலீசார் கொளத்தூர் அன்னை சத்யா நகர், பகுதியை சேர்ந்த சசிக்குமார் (19) என்ற இளைஞரை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரித்தபோது சசிகுமார் பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளான்.

ஆம், சம்பவத்தன்று இரவு சசிகுமார் மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் ரெட்டேரி வழியாக வந்துகொண்டிருந்தபோது கொளத்தூரில் உள்ள உறவினரின் வீட்டிற்கு நடந்துவந்துகொண்டிருந்த சங்கர், சசிகுமாரிடம் லிப்ட் கேட்டுள்ளார். சசிகுமாரும் லிப்ட் கொடுத்து கூட்டிவந்தநிலையில், சம்பவ இடமான வளர்மதி நகருக்கு வந்த போது தனது பைக்கிற்கு பெட்ரோல் போட 100 ரூபாய் பணம் தரும்படி சசிகுமார் சங்கரிடம் கேட்டுள்ளார்.

அதற்கு சங்கர் பணம் தரமுடியாது, என்னை கீழே இறக்கிவிட்டு, நான் நடந்தே செல்கிறேன் என கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் வந்து கைகலப்பாக மாறியுள்ளது. தான் தாக்கியதில் அந்த நபர் கீழே விழுந்துவிட்டார் எனவும், அவர் மயக்கத்தில் இருப்பதாகவும், காலையில் எழுந்து அவரே சென்றுவிடுவார் என நினைத்துதான் நான் அங்கிருந்து கிளப்பியதாகவும், கிளம்பும்போது அவரது சட்டை பையில் இருந்த 1000 ரூபாய் பணத்தையும் எடுத்துக்கொண்டு சென்றதாக சசிகுமார் போலீசாரிடம் கூறியுள்ளான்.

இதனை அடுத்து சசிகுமார் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement