மாயமான 4 வயது சிறுவனுக்கு உறவினர் செய்த கொடூரம்! கடத்தி சென்று கழிப்பறையில் கழுத்தை அறுத்து... கல்குவாரியில் காத்திருந்த அதிர்ச்சி! மதுரையில் நடந்த கொடூரம்...!!!
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் திடீரென மாயமானார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில், சிறுவன் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் 18 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீர் மாயம்
திருமங்கலம் அருகேயுள்ள பாரபத்தி கிராமத்தைச் சேர்ந்த முருகன் - நாச்சம்மாள் தம்பதியின் 4 வயது மகன் மோகன். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென காணாமல் போனார். வேலை முடிந்து வீடு திரும்பிய பெற்றோர், உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினருடன் பல்வேறு இடங்களில் தேடியும் மோகன் கிடைக்கவில்லை.
இதையும் படிங்க: அம்மாவின் கண்முன்னே துடிதுடித்து இறந்த 4 வயது சிறுவன்..! சாலை விபத்தில் நேர்ந்த கொடூரம்... பகீர் சம்பவம்!!!
இதையடுத்து கூடக்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுவனை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
சாக்குமூட்டையுடன் சென்ற இளைஞர் மீது சந்தேகம்
விசாரணையின்போது, அதே பகுதியைச் சேர்ந்த முருகனின் உறவினரான 18 வயது மணி என்பவர் சந்தேகத்திற்கிடமான வகையில் சாக்குமூட்டை ஒன்றை எடுத்துச் சென்றதாக கிராம மக்கள் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் மணியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மோகனை கழுத்தை அறுத்துக் கொலை செய்ததாகவும், உடலை சாக்குமூட்டையில் கட்டி கல்குவாரி பள்ளத்தில் வீசியதாகவும் மணி ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து தனிப்படை போலீசார் குவாரி பள்ளத்துக்குச் சென்று சிறுவனின் உடலை மீட்டனர்.
முன்விரோதத்தில் பழிவாங்க திட்டமிட்டதாக வாக்குமூலம்
மீட்கப்பட்ட சிறுவனின் உடல் உடற்கூறாய்வுக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மணியை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தியபோது, இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்கனவே இருந்த தகராறு குறித்து தகவல்கள் வெளிவந்தன.
மணியின் பெரியப்பா மகளுக்கும் சிறுவன் மோகனின் சித்தப்பாவுக்கும் இடையே இருந்ததாக கூறப்படும் தகாத உறவு தொடர்பாக குடும்பங்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டிருந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த மணி, பழிவாங்கும் நோக்கில் சிறுவனை கடத்திச் சென்று கழிப்பறையில் வைத்து கழுத்தை அறுத்துக் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த கொலை தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 4 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட தகவல் பாரபத்தி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.