நாளைமுதல் திறக்கப்படும் டாஸ்மாக்.! இந்த அவச்சொல் எழாமல் புதிய முதல்வர் பார்த்துக்கொள்ளவேண்டும்.! கமல்ஹாசன்
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பல கட்டங்களாக ஊரடங்கு நீடிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்து வருகிறது. கடந்த திங்கட்கிழமையில் இருந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு நாளை காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஒருவாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கால் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டநிலையில், நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர 27 மாவட்டங்களில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
குடித்துப் பழகியவர்களுக்கும், விற்றுப் பழகியவர்களுக்குமே மது அத்தியாவசியம். ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை எனும் அவச்சொல் எழாமல் புதிய முதல்வர் பார்த்துக்கொள்ளவேண்டும்.
— Kamal Haasan (@ikamalhaasan) June 13, 2021
இதனிடையே, டாஸ்மாக் கடைகள் நாளை திறக்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பைக் கண்டித்து பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”குடித்துப் பழகியவர்களுக்கும், விற்றுப் பழகியவர்களுக்குமே மது அத்தியாவசியம். ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை எனும் அவச்சொல் எழாமல் புதிய முதல்வர் பார்த்துக்கொள்ளவேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.