மாணவர்களிடையே அதிகரித்த போதை பழக்கம்!,,உஷாரான போலீஸ்!..சிக்கிய கும்பல்..!

மாணவர்களிடையே அதிகரித்த போதை பழக்கம்!,,உஷாரான போலீஸ்!..சிக்கிய கும்பல்..!


It was revealed that drugs were being sold targeting college students

சேலம் மாவட்டம், வீரபாண்டி அருகேயுள்ள ஆட்டையாம்பட்டி பகுதியை சுற்றியுள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களிடம் போதை பழக்கம் அதிகரித்துள்ளதாகவும், அந்த பகுதிகளில் போதை பொருட்களின் புழக்கம் அதிகம் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போதை பொருட்கள் விற்பனை கும்பலை பிடிக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபினவ், மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் சரவணன் (சி.பி.சி.ஐ.டி) உதவி ஆய்வாளர் சக்தி ஆகியோருக்கு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து, அந்த பகுதியில் தங்கி படிக்கும் கல்லூரி மாணவர்களை ரகசியமாக கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே சின்னசீரகாபாடி கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது.

இதனையடுத்து, சம்மந்தப்பட்ட மாணவர்கள் தங்கி இருந்த ஒரு வீட்டில் அதிரடியாக நுழைந்த காவல்துறையினர் அங்கு இருந்த 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தை சேர்ந்த பிலிப் (வயது 23), அதே ஊரை சேர்ந்த அமல் (20) மற்றும் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த விக்னேஷ்குமார் (22) என்பதும், அவர்களில் பிலிப், அமல்  2 பேரும் சேலத்தில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் அவர்கள் 3 பேரும் கர்நாடக மாநிலம், பெங்களூருவில் போதைப் பொருள் விற்பனை செய்யும் கும்பலிடம் 'மெத்தம் பேட்டமைன்' என்ற போதை பொருளை ஒரு கிராம் ரூ. 3 ஆயிரத்துக்கு வாங்கி வந்து அதை ரூ. 5 ஆயிரத்துக்கு சேலத்தில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து காவல் ஆய்வாளர் அம்சவள்ளி வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தார். மேலும் போதை பொருட்கள் விற்பனை செய்வதில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பதும், அவர்கள் தலைமறைவாக இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. தலைமறைவாக உள்ளவர்களை தனிப்படை அமைத்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.