கர்ப்பிணி மனைவியை கடப்பாரையால் அடித்துக் கொன்ற காதல் கணவன்! விசாரணையில் வெளியான பகீர் தகவல்!
காஞ்சிபுரம் அருகே கிழம்பி புதூர் பகுதியில் வசித்து வருபவர் ஹரி. இவரும் தேவி என்ற பெண்ணும் காதலித்து வந்தநிலையில், இருவரும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனர். இந்தநிலையில், தேவி 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
தேவியின் கணவன் ஹரி குடிபோதைக்கு அடிமையானதால் மது குடித்து விட்டு அடிக்கடி தேவியிடம் தகராறு செய்து வந்ததாகத் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றையதினம் மது குடித்து விட்டு தேவியிடம் தகராறு செய்துள்ளார் ஹரி. ஒருகட்டத்தில் போதை தலைக்கேறி வீட்டிலிருந்த கடப்பாரை கம்பியை எடுத்து தேவியின் தலையில் தாக்கியுள்ளார்.
தலையில் பலமாக அடி விழுந்ததால், பலத்த காயமடைந்த தேவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தேவியின் சடலத்தைக் கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து தேவியின் கணவர் ஹரியைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், ஹரி மற்றும் தேவி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால் தேவிக்குத் தனது கணவர் ஹரி குடிபோதைக்கு அடிமையாகி இருந்தது தெரியாது. திருமணத்திற்குப் பின்னர் ஹரி தினமும் மதுக் குடித்து வந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துகொண்டிருந்தது.
அந்த வகையில் நேற்று இருவருக்கும் பிரச்சனை முற்றியதால் குடிபோதையிலிருந்த ஹரி கடப்பாரை கம்பியால் தேவியை அடித்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார். தற்போது ஹரியைக் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.