இப்படி ஒரு சோகம் யாருக்கும் வரக்கூடாது.. அதிகாலையில் நடந்த பயங்கரம்.! தவித்து நிற்கும் அப்பாவி குழந்தைகள்.!



husband and wife died in fire accident

ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததில் அறையில் தூங்கி கொண்டிருந்த கணவன் மனைவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை ஆனையூர் எஸ்.வி.பி. நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சக்தி கண்ணன். இவரது மனைவி சுபா. இந்த தம்பதிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். சக்திகண்ணன் அவர் வசிக்கும் பகுதியில் சோப் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு இவர்களின் பிள்ளைகள் இருவரும் வீட்டில் கீழே உள்ள அறையில் தூங்க சென்றனர். கணவன், மனைவி இருவரும் மாடியில் உள்ள அறையில் தூங்கினார்.

இந்தநிலையில் இன்று அதிகாலை அவர்களின் வீட்டின் மாடியில் இருந்து கரும்புகை வெளியே வந்துள்ளது. இதனை பார்த்த பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் வீட்டின் கதவை தட்டி குழந்தைகளிடம் வீட்டின் மாடியில் இருந்து கரும்புகை வருவது பற்றி கூறியுள்ளனர். இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் வீட்டின் மாடியில் உள்ள அந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சக்தி கண்ணன் மற்றும் அவரின் மனைவி இருவரும் தீயில் கருகி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து அவர்களின் உடல்களை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிகாலையில் நடந்த இந்த சம்பவம் ஆனையூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.