தமிழகம் சமூகம்

வாடகை வீட்டில் இருந்த 9 வயது சிறுமிக்கு உரிமையாளரின் மகன் செய்த கொடூரம்!

Summary:

House owner son tortured a girl

மதுரையில் வாடகை வீட்டில் குடியிருந்த தம்பதியரின் ஒன்பது வயது மகளை வீட்டின் உரிமையாளரின் மகன் மின்சாரம் பாய்ச்சி சிறுமியை கொடுமைப்படுத்தி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை பேச்சியம்மன் படித்துறைப் பகுதியில் உள்ள மணிவண்னன் என்பவருக்குச் சொந்தமான வாடகை வீட்டில் கணேஷ்குமார்-ராஜலட்சுமி தம்பதியினர் தங்கள் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். ஒன்பது வயதான மூத்த மகள் ஹரினி அருகில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

வீட்டு உரிமையாளர் மணிவண்ணன் கடந்த சில நாட்களாகவே அவர்களை காலி செய்யும்படி வற்புறுத்தி உள்ளார். ஆனால் அவர்களுக்கு வேறு வீடு கிடைக்காததால் காலம் தாழ்த்தி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வீட்டு உரிமையாளரின் மகன் சந்தோஷ் அவர்களது மூத்த மகள் ஹரிணியை சித்திரவதை செய்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை மாடியில் விளையாடி கொண்டிருந்த ஹரிணியை அழைத்த சந்தோஷ் சிறுமியை அடித்து அவர் மீது மின்சாரத்தையும் பாய்ச்சியுள்ளார். இதனால் பேச்சு மூச்சின்றி சிறுமி மயக்கம் அடைந்ததையடுத்து சந்தோஷ் அங்கிருந்து தப்பி விட்டார்.

சிறுமியைக் கண்ட பெற்றோர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சில நாட்கள் பேசமுடியாமல் இருந்ததால் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை. எதிர்பாராமல் நடந்த விபத்து தான் என சிறுமியின் பெற்றோர் கருதினர். பின்னர் மருத்துவமனையில் இருந்து சிறுமியை அழைத்து வந்தபின் அவர் மீது உடம்பில் காயங்கள் இருப்பதை கண்டனர்.

இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு சிறுமியை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சில நாட்களுக்குப் பிறகு சிறுமி பேசத் துவங்கியதும் அன்று நடந்த சம்பவத்தை பற்றி கூறியுள்ளார். அதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் உரிமையாளரின் மகன் சந்தோஷை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement