செஞ்சி சிறுமி வழக்கில் சிபிசிஐடி போட்ட கிடுக்குப்பிடி விசாரணை! தாய், பாட்டி சொன்னதை வைத்து கண்டுப்பிடிக்கும் மர்மம்... அடுத்தடுத்து அதிரடி காட்டும் அதிகாரிகள்..!!!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி ஹேமலதா மாயமாகி இரண்டு வாரங்களுக்கும் மேலாகியும், அவர் எங்கு இருக்கிறார் என்பது இன்னும் தெரியவில்லை. பிறந்தநாள் கொண்டாடிய இரவில் தாய், பாட்டியுடன் வீட்டில் தூங்கிய சிறுமி, மறுநாள் அதிகாலையில் காணாமல் போனார். இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி அதிகாரிகள், தற்போது தாய் பவானி, பாட்டி மற்றும் பழைய குற்றவாளி ராஜதுரை ஆகியோரை மையமாக வைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
சிறுமி தூங்கிய அறையில் என்ன நடந்தது?
செஞ்சி அருகே ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு – பவானி தம்பதியின் மகள் ஹேமலதா (ஹேமாவதி), அக்டோபர் 11-ம் தேதி இரவு தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். பின்னர் தாய் மற்றும் பாட்டியுடன் ஒரே அறையில் படுத்து உறங்கிய சிறுமி, அதிகாலையில் மாயமானது குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வீட்டில் அனைவரும் இருந்தபோதும் சிறுமி எப்படி வெளியே சென்றார், யாராவது அவரை அழைத்துச் சென்றார்களா, வாசற்கதவு திறக்கப்பட்டபோது சத்தம் கேட்கவில்லையா என்ற கேள்விகளுக்கு இன்னும் தெளிவான பதில் கிடைக்கவில்லை. இதனால், சம்பவத்தன்று இரவு வீட்டில் நடந்தவற்றைத் தெரிந்துகொள்ள பாட்டியிடம் சிபிசிஐடி அதிகாரிகள் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத்துக்குள் ஏதேனும் பிரச்சினைகள் அல்லது கொடுக்கல் வாங்கல் தொடர்பான விவகாரங்கள் இருந்தனவா என்பதையும் விசாரித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாய் பவானியிடம் முரண்பாடுகள் குறித்து விசாரணை
சிறுமியின் தாய் பவானியிடம் ஏற்கெனவே பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆறு ஆண்டுகளாக இல்லாத வகையில் திடீரென பிறந்தநாள் கொண்டாடப்பட்டது, சாமியார் தொடர்பான தகவல்கள், நள்ளிரவில் வீட்டின் வாசற்கதவு திறந்திருந்ததாகக் கூறப்படும் விவரம் உள்ளிட்ட அம்சங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பாட்டியிடம் பெறப்படும் வாக்குமூலத்தையும் தாயின் பதில்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து, தகவல்களில் முரண்பாடுகள் உள்ளனவா என ஆராய்கின்றனர்.
ராஜதுரையிடமும் விசாரணை தீவிரம்
குடும்பத்தினரைத் தாண்டி வெளியாட்கள் யாருக்காவது சிறுமி மாயமானதில் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. இதற்காக பரடந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராஜதுரையிடம் அதிகாரிகள் விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது. சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட அவரிடம், உள்ளூர் நபர்கள் அல்லது வெளியாட்களின் தொடர்பு குறித்து தகவல்கள் திரட்டப்படுகின்றன.
இவ்வாறு குடும்பத்தினர் தொடர்பான சந்தேகங்கள் ஒருபுறமும், வெளிநபர்களின் தொடர்பு குறித்த விசாரணை மறுபுறமும் தொடர்கிறது. இருப்பினும், இதுவரை யாருடைய தொடர்பும் உறுதிப்படுத்தப்பட்டதாகத் தகவல் இல்லை. சிறுமி ஹேமலதா மாயமானதற்கான காரணத்தையும், அவர் இருக்கும் இடத்தையும் கண்டறிய சிபிசிஐடி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பிறந்தநாள் கேக்கில் இருக்கும் மர்மம்... செஞ்சி சிறுமி வழக்கில் சிக்கிய மாப்பிள்ளை தம்பி...! பல கோணங்களில் பரபரப்பு விசாரணை..!!!