27 நாட்கள் ஆகிட்டு...! நள்ளிரவில் என்னதான் நடந்தது? அடர்ந்த காட்டு பகுதியில் அரவிந்த், ராஜதுறையிடம் வெளியான பகீர் வாக்குமூலம்! சிபிசிஐடியின் தொடர் ஆய்வு..!!!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டியில் மாயமான 7 வயது சிறுமி ஹேமலதாவைத் தேடும் பணியில் சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். சிறுமி காணாமல் போய் 27 நாட்களாகியும் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில், ஏற்கெனவே பலமுறை விசாரிக்கப்பட்ட ராஜதுரை என்ற ரவுடியிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்தி வருவது வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
27 நாட்களாகத் தொடரும் சிறுமியைத் தேடும் பணி
ஆலம்பூண்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் மகள் ஹேமலதா, கடந்த அக்டோபர் 11-ம் தேதி நள்ளிரவில் தாயின் அருகில் தூங்கிக் கொண்டிருந்தபோது காணாமல் போனார். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சுமார் 10 நாட்கள் விசாரணை நடத்தியும் முக்கியத் துப்பு கிடைக்காததால், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இதையும் படிங்க: நான் செஞ்சி சிறுமியை வயதான தம்பதியருடன் கோயிலில் பார்த்தேன்! பவானி அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்..! 7 வயது சிறுமி வழக்கில் திடீர் திருப்பம்!!!
துணை காவல் கண்காணிப்பாளர்கள் வேல்முருகன், கீதா தலைமையில் தனிப்படையினர் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர். பெற்றோர், சாமியார்கள், தேசிய அனுமதி பெற்ற லாரி ஓட்டுநர்கள், வில்லுப்பாட்டுக் குழுவினர் எனப் பல தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அருகிலுள்ள சுடுகாடுகளிலும் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் சிறுமி குறித்த தகவல் கிடைக்கவில்லை.
ராஜதுரையிடம் 4-வது முறையாக விசாரணை
இந்த நிலையில், பரடந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராஜதுரையிடம் சிபிசிஐடி அதிகாரிகள் 4-வது முறையாக விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த நள்ளிரவில் அவர் தனது கூட்டாளிகளுடன் அந்தப் பகுதியில் மது அருந்தியதாகவும், வடிவேலுவின் வீட்டில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது. இந்தத் தகவல்களின் அடிப்படையிலேயே அவரிடம் மீண்டும் விசாரணை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
600-க்கும் மேற்பட்ட செல்போன் சிக்னல்கள் ஆய்வு
ராஜதுரையின் நெருங்கிய கூட்டாளி அரவிந்தை அடர்ந்த காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அவர் அளித்த தகவல்களையும் ராஜதுரை ஏற்கெனவே தெரிவித்த பதில்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் வகையில் இந்த விசாரணை நடைபெறுகிறது.
மேலும், சிறுமி மாயமான நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் அந்தப் பகுதியில் பதிவான 600-க்கும் மேற்பட்ட செல்போன் சிக்னல்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அவற்றின் அடிப்படையில் ராஜதுரையுடன் தொடர்பில் இருந்தவர்களிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. செஞ்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள ரகசிய இடத்தில் ராஜதுரையிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, தனது மகள் உயிருடன் இருப்பதாக நம்பும் தாய் பவானி, சிறுமியை மீட்டுத் தருமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். 27 நாட்களாக நீடிக்கும் இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை மூலம் முக்கியத் தகவல்கள் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. எனினும், சிறுமியின் நிலை குறித்தோ, ராஜதுரையின் தொடர்பு குறித்தோ இதுவரை உறுதியான தகவல் வெளியாகவில்லை.