தயவு செய்து தேவையில்லாத பேச்சு பேசாதீங்க..! எங்களுக்கு பணம் வேண்டாம்.. எங்க மகளை மீட்டு கொடுத்தாலே போதும்! கண்ணீர்விட்டு கதறிய செஞ்சி சிறுமியின் தாய்..!!!



hemalatha-missing-child-parents-appeal

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தில் மாயமான 7 வயது சிறுமி ஹேமலதாவைத் தேடும் பணி 22 நாட்களைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. பிறந்தநாளைக் கொண்டாடிய நாளின் இரவே வீட்டிலிருந்து சிறுமி காணாமல் போனார். உள்ளூர் போலீசாரைத் தொடர்ந்து தற்போது சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, மகளைத் தேடி தவிக்கும் பெற்றோர் தங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர்.

22 நாட்களாகியும் கிடைக்காத சிறுமி குறித்த தகவல்

ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா, தனது பிறந்தநாளைக் கொண்டாடிய அன்றைய இரவு படுக்கையறையில் இருந்து மாயமானார். இதையடுத்து போலீசார் காடுகள், கிணறுகள், ஏரிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடுதல் நடத்தினர். ஆனால், சிறுமி எங்கிருக்கிறார் என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் கிடைக்கவில்லை.

இதையும் படிங்க: 22 நாட்களுக்கு மேல் ஆகிட்டு..! வெவ்வேறு திசைகளில் சென்று மீண்டும் வீட்டுக்கே திரும்பும் விசாரணை...! செஞ்சி சிறுமி வழக்கில் என்னதான் நடந்தது...? நாளுக்கு நாள் அதிர்ச்சி...!!!

உள்ளூர் காவல்துறையின் விசாரணைக்குப் பிறகு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தற்போது சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் சந்தேகத்துக்குரிய நபர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பல்வேறு கோணங்களில் தேடுதல் தொடர்ந்தாலும், வழக்கில் இன்னும் தெளிவான முடிவு கிடைக்கவில்லை.

வேலைக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் பெற்றோர்

மகள் காணாமல் போன நாளிலிருந்து வடிவேலு - பவானி தம்பதியினர் பெரும் மனவேதனையில் உள்ளனர். மகளைத் தேடி அலைவதால் வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், குடும்பத்தின் அன்றாடச் செலவுகளைக்கூட சமாளிக்க முடியாமல் தவிப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே ஊடகங்களுக்குப் பேட்டியளித்த தாய் பவானி, தங்கள் குழந்தையைத் தேடுவதற்கு ஆதரவு அளித்து வரும் ஊடகங்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்தார். அதே நேரத்தில், சமூக வலைதளங்களில் குடும்பத்தினரைப் பற்றி சிலர் பரப்பும் வதந்திகளும் அவதூறுகளும் தங்களை மனதளவில் பாதிப்பதாக வேதனை தெரிவித்தார்.

மகளை உயிருடன் மீட்டுத் தர வேண்டும் என தாய் உருக்கமான கோரிக்கை

பணம், புகழ் எதுவும் தங்களுக்குத் தேவையில்லை என்றும், மகளை உயிருடன் மீட்டுத் தந்தால் அதுவே போதும் என்றும் பவானி கண்ணீர் மல்கக் கூறியுள்ளார். சிறுமி காணாமல் போன வழக்கில் தேவையற்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையே, தமிழக முதல்வரும் காவல்துறை உயர் அதிகாரிகளும் இந்த வழக்கில் நேரடியாகக் கவனம் செலுத்தி, தேடுதல் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர். சிறுமி ஹேமலதா விரைவில் பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

இதையும் படிங்க: என் மகள் உயிரோடதான் இருக்காள்..! முழு நம்பிகையுடன் கதறி அழுத காத்திருக்கும் தாய்... செஞ்சி சிறுமி வழக்கில் நெஞ்சை உருக்கும் தருணம்..!!!