கடந்த 100 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு கொட்டித்தீர்த்த கனமழை.! வெள்ளக்காடாக மாறிய சென்னை.!
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. நேற்று, டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தநிலையில் மாறாக, சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில், எதிர்பாராத அளவுக்கு திடீர் கனமழை கொட்டித் தீர்த்தது. நேற்று அதிகாலையில் துவங்கிய மழை, நள்ளிரவு வரை பெய்தது.
சென்னையில் நேற்று அதிகாலையில் இருந்தே கனமழை பெய்ததால் கோயம்பேடு, எழும்பூர், அண்ணாநகர், நுங்கம்பாக்கம், கிண்டி, பட்டினப்பாக்கம், அடையாறு, திருவான்மியூர், வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம் உள்பட பல இடங்களில் இடைவிடாமல் கனமழை கொட்டித்தீர்த்தது.
இதனால் சென்னையின் தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. சென்னையில் பல இடங்களில் சாலைகளின் இருபுறங்களிலும் தண்ணீர் தேங்கி இருந்தது. பல பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. திடீரென விடாது கொட்டிய மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கனமழை காரணமாக செம்பரம்பாக்கம், புழல் மற்றும் பூண்டி ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. எனவே பாதுகாப்பு கருதி செம்பரம்பாக்கம் அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. கடந்த 100 வருடத்தில் சென்னையில் இதுவே ஜனவரி மாதம் பெய்த மழையில் மிக அதிகம் என கூறப்படுகிறது.