அரசு மருத்துவமனை அலட்சியத்தால் பரிதாபம்.. குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் பரிதாப பலி.. உறவினர்கள் கண்ணீர்..!

அரசு மருத்துவமனை அலட்சியத்தால் பரிதாபம்.. குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் பரிதாப பலி.. உறவினர்கள் கண்ணீர்..!


female-due-to-died-improper-surgery-in-tharmapuri

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையின் போது, தவறான சிகிச்சையால் பெண்மணி உயிரிழந்த சோகம் தருமபுரியில் நிகழ்ந்துள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி, பூனையனூர் கிராமத்தில் வசித்து வருபவர் சூர்யா. இவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் சேலம் மாவட்டத்தில் உள்ள தேக்கம்பட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். இத்தகைய நிலையில், சூர்யா இரண்டாவது பிரசவம் முடிந்து, இரண்டு வருடங்களுக்கு பின், குடும்ப கட்டுப்பாடு செய்வதற்காக  தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.

சூர்யாவிற்கு பையர்நத்தம் அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை சனிக்கிழமை செய்யப்பட்டது. இருப்பினும், சிகிச்சை முடிந்த நிலையிலும், சூர்யா எவ்வித அசைவுமின்றி இருந்துள்ளார். அதன்பின் சூர்யாவின் கணவர் கோவிந்தராஜை அழைத்த நர்ஸ்கள், 'சிகிச்சை முடிந்துவிட்டது. உங்கள் மனைவியிடம் சென்று பேசுங்கள்' என்று தெரிவித்துள்ளனர். 

இதனைத் தொடர்ந்து கோவிந்தராஜ் உள்ளே சென்று மனைவியிடம் பேச முயற்சித்த போது, மனைவி எந்த விதமான அசைவுமில்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, "ஏன் இன்னும் மயக்கத்தில் இருக்கிறார்?" என்று கேட்டுள்ளார். இதற்கு நர்ஸ்கள் அவர் அறுவை சிகிச்சையின் போது மயக்கம் அடையாத காரணத்தால், அதிக அளவு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. எனவே தான் இன்னமும் மயக்கம் தெளியவில்லை. சிறிது நேரத்தில் சரியாகிவிடும் என்று சமாளித்து உள்ளனர். அத்துடன் அவரிடம் ஒப்புதல் கையெழுத்து வாங்க அவர்கள் முயற்சித்துள்ளனர்.

Dharmapuri

ஆனால், கோவிந்தராஜ் சந்தேகமடைந்து கையெழுத்து போட முடியாது என்று மறுத்துள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது சூர்யாவுக்கு சிகிச்சை அளித்த நிலையில், அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சூர்யாவிற்கு தவறான முறையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் அவர் உயிரிழந்து விட்டார் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டு உடலை வாங்க மறுத்துள்ளனர். 

அப்போது விசாரணை செய்ய வந்த சார் ஆட்சியர் வாகனத்தை மறித்து போராட்டம் செய்தனர். இதனை தொடர்ந்து, சார் ஆட்சியர் அவர்களிடம் விசாரணை நடத்தி இதற்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். இதுகுறித்து கோவிந்தராஜ் பேசுகையில், "தனது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் எங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்" என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.