10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மகன் தோல்வி அடைந்ததால் தந்தை விஷம் குடித்து தற்கொலை... சோகத்தில் குடும்பத்தினர்...
ஈரோடு அம்மாபேட்டை அருகே உள்ள கல்பாவி தொட்டிபாளையத்தை சேர்ந்தவர் அப்புசாமி - சுமதி தம்பதியினர். இவர்களுக்கு சஞ்சய், சந்துரு என்ற 2 மகன்கள் உள்ளனர். அப்புசாமி சொந்தமாக மினி ஆம்னி வேன் வைத்து ஓட்டி வந்துள்ளார். சுமதி தனியார் கம்பெனி ஒன்றில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் அப்புசாமியின் மூத்த மகன் சஞ்சய் மயிலம்பாடியில் உள்ள அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதில் சஞ்சய் மூன்று பாடத்தில் தோல்வி அடைந்துள்ளார்.
அதனையடுத்து அப்புசாமி தனது மகனை தனியார் டுட்டோரியல் கல்லூரியில் சேர்த்தார். ஆனால் சஞ்சய் கல்லூரிக்கு செல்ல மறுப்பு தெரிவித்ததால் மன வேதனையில் இருந்துள்ளார் அப்புசாமி. இந்நிலையில் சம்பவத்தன்று அப்புசாமி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை முயற்சி ஈடுபட்டுள்ளார்.
உடனே அவரை மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சையில் இருந்த அப்புசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.