தொடர் மழையால் வீடு இடிந்து விழுந்து தந்தை, மகள் பலி... சோகத்தில் கிராம மக்கள்...



 father-and-daughter-died-to-continues-high-rain

ஆழ்வார்குறிச்சி அருகே வாகைக்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுந்தரம்(60) - வேலம்மாள்(55) தம்பதியினர். இவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் 3 பெண்களை திருமணம் செய்து கொடுத்து விட்டார் சுந்தரம். 4-வது மகளான ரேவதிக்கு (25) இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் சுந்தரத்தின் வீடு பழைய காலத்து கட்டை குத்திய வீடாகும். விடாமல் பெய்த தொடர் கோடை மழையை அடுத்து மூவரும் வீட்டின் உள்ளே படுத்து உறங்கியுள்ளனர். அப்போது திடீரென இரவு 11 மணியளவில் வீட்டின் மேற்கூரை இடிந்து தூங்கி கொண்டிருந்த மூவரின் மீதும் விழுந்துள்ளது.

உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அதில் தந்தை சுந்தரம் மற்றும் அவரது மகள் உயிரிழந்துள்ளனர்.

வேலம்மாள் மட்டும் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிகழ்வு கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.