நள்ளிரவில் இரட்டை கொலை.. ரவுடிகளை நோட்டமிட்டு வெட்டிய 8 பேர் கும்பல்.. பல்லாவரத்தில் பயங்கரம்.!
சென்னையில் இரு ரவுடிகள் நள்ளிரவில் கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள பல்லாவரம், திரிசூலம் பகுதியில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் 2 ரவுடிகள் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் வந்த கும்பல் இவர்களை கொடூரமாக கொலை செய்து தப்பி சென்றது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் ரவுடிகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்தவர்கள் யார்?
மேலும் இது குறித்து விசாரணை நடத்தியதில் உயிரிழந்தவர்கள் தாம்பரம், முடிச்சூர் எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வந்த ஆறுமுகம் (வயது 21), முடிச்சூர், லட்சுமி நகர், காந்தி தெருவில் வசித்து வந்த சதீஷ் (வயது 22) ஆகியோர் என்பதும், இருவரும் நண்பர்கள் என்பது தெரிய வந்துள்ளது. ஆறுமுகத்தின் மீது காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி என ஆறு வழக்குகள் இருக்கின்றன.
இதையும் படிங்க: IAS அதிகாரியின் மகள் வரதட்சணை கொடுமையால் தற்கொலை.. 8 மாதத்தில் கசந்த காதல் திருமணம்.!

தலைமறைவாக இருந்த ரவுடிகள்:
கடந்த ஆண்டு எழுச்சூர் ஊராட்சி மன்ற தலைவரை வெட்டிய சம்பவத்தில் ஆறுமுகத்துக்கு தொடர்பு இருக்கும் நிலையில், சில நாட்களுக்கு முன் முடிச்சூரை சேர்ந்த ரவுடி தீபக் (வயது 23) என்பவரை வீடு புகுந்து தாக்கிய வழக்கில் ஆறுமுகத்தின் நண்பர்கள் அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து ஆறுமுகம் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் தீபக் தலைமையிலான 8 பேர் கும்பல் இவர்களை நோட்டமிட்டு கொலை செய்தது தெரியவந்துள்ளது.
சாமி கும்பிட்டு கொலை:
தப்பிச்சென்ற கொலையாளிகளை அடையாளம் காண அதிகாரிகள் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது கொலை கும்பல் மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோவில் வந்து இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றியது தெரிய வந்தது. தங்களது கொலை சம்பவத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற சாமி கும்பிட்டு விட்டு கொலை சம்பவத்தை நடத்தியதும் பதிவாகி இருந்த நிலையில், இந்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளிகளை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மாமியாரின் மூக்கை வெட்டி கையில் எடுத்துச் சென்ற மருமகன்.. குடும்ப தகராறில் கொடூரம்.!