விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் மரணம்!

விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை தனிவார்டில் அனுமதிக்கப்பட்ட முதியவர் இன்று காலை உயிரிழந்தார்.
கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்தியாவிலும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியதால் பிரதமர் மோடி ஊரடங்கை மே 3 வரை அமல்படுத்தியுள்ளதால் கொரோனா பரவல் இந்தியாவில் சற்று குறைய தொடங்கியது.
தமிழகத்திலும் கொரோனவை கட்டுப்படுத்த தீவிர தடுப்பு நடவடிக்கையை தமிழக சுகாதார துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா பரவல் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் பானாம்பட்டு பகுதியை சேர்ந்த 52 வயது மதிக்கத்தக்க ஒருவர் கொரோனா அறிகுறியுடன் விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை தனிவார்டில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளார். அந்த முதியவரின் ரத்த மாதிரி பரிசோதனை முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை. எனினும், கொரோனா நோய்க்கான வழிகாட்டுதல்படி, முதியவரின் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது.
உயிரிழந்தவரின் ரத்த மாதிரி சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கிருந்து அறிக்கை வந்த பின்னர்தான் அவருக்கு கொரோனா வைரஸ் இருந்ததா என்பது தெரியவரும் என கூறப்படுகிறது.