உயிரைப்பறித்த கொசு மருந்து? கோவையில் நடந்த சோகம்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் விபரீதம்.!
பருவகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டபோது, கொசு மருந்தின் புகை தாங்காமல் இருவர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
டெங்கு காய்ச்சல்:
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர் பேரூராட்சி, 7 வது வார்டில் சில நாட்களுக்கு முன்னர் 3 குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீட்டுக்கு திரும்பி இருந்தனர். இந்த விஷயம் குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: கோவையில் ரணகொடூரம்.. கஞ்சா விற்பனை புகார் கொடுத்ததால் கல்லூரி மாணவர் சித்ரவதை கொலை..!
நடவடிக்கை:
இதனையடுத்து, அன்னூர் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், குடிநீர் வடிகால் அதிகாரிகள், ஊழியர்கள் சேர்ந்து கொசு மருந்து அடித்துள்ளனர். அப்போது, அளவுக்கு அதிகமாக அப்பகுதியில் மருந்து தெளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சோகம்:
அச்சமயம், ஆட்டோ ஓட்டுநர் மோகன் (வயது 65) என்பவரின் வீட்டுக்குள் சென்று புகை அடிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்துக்கு அவரின் மனைவி பாக்கியம், மகள்கள் நிவேதா, ஹேமா எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தந்தைக்கு சுவாசக்கோளாறு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால், எதையும் கண்டுகொள்ளாத ஊழியர்கள், மருந்து அடித்துள்ளனர்.

வாக்குவாதம்:
உள்ளூர் மக்களும் அவர்களின் நிலைமையை கூறி எதிர்ப்பு தெரிவித்தபோது, எங்களிடம் அரசாணை இருக்கிறது. நாங்கள் வீட்டுக்குள் சென்று அடிப்போம் என்று கூறி இருக்கின்றனர். சாக்கடை வடிகால் மட்டுமல்லாமல், வீட்டுக்குள்ளும் சென்று மருந்து அடிப்போம் என காணப்பட்ட இடமெல்லாம் மருந்து அடித்தவர்கள், இவர்களின் தெரு பகுதியில் அளவுக்கு அதிகமாக மருந்து அடித்துள்ளனர்.
அடுத்த சோகம்:
இதே பகுதியில் வசித்து வந்த மூதாட்டி ராணி (வயது 75) மூச்சுத்திணறல் காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், அடுத்தடுத்த அரைமணிநேரத்தில் இருவரும் அடுத்தடுத்து மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு உயிரிழந்தனர். இதனால் உறவினர்கள் பேரூராட்சி நிர்வாகத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர். இதுகுறித்து விசாரணையும் நடந்து வருகிறது.
இதையும் படிங்க: 300 அடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கிய கார்.. 3 பேர் பரிதாப பலி.. நொடியில் அரங்கேறிய சோகம்.!