மறுவீடு செல்கையில் பரிதாபம்.. லாரியால் துயரம்..! தாய், புதுமாப்பிள்ளை பரிதாப பலி..!!



Coimbatore New Married Man and his Mother Died Accident on Spot

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுந்தரபுரம் பகுதியில் வசித்து வருபவர் சவுடையன். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவரின் மனைவி மஞ்சுளா (வயது 52). இந்த தம்பதியின் மகன் ஷியாம் பிரசாந்த் (வயது 28). இவர் கோவையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், தேனி மாவட்டத்தில் உள்ள போடியை சேர்ந்த சுவாதி (வயது 23) என்ற பெண்ணுக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்று முடிந்தது. 

இருவரின் திருமணமும் கோவையில் வைத்து நடைபெற்ற நிலையில், திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதிகள் ஷியாம் பிரசாந்தின் வீட்டில் இருந்துள்ளனர். இன்று போடியில் இருக்கும் மணப்பெண் வீட்டிற்கு மறுவீடு செல்ல திட்டமிட்ட புதுமண தளபதி, இன்று காலை புறப்பட்டுள்ளது. அவர்களுக்கு சொந்தமான காரில் ஷியாம் பிரசாந்த், மனைவி சுவாதி, ஷியாமின் பெற்றோர் சவுடையன், மஞ்சுளா ஆகிய 4 பேர் காரில் கிளம்பியுள்ளனர். 

ஷியாம் பிரசாந்த் காரை இயக்கிய நிலையில், முன்னிருக்கையில் சுவாதி மற்றும் பின்னால் உள்ள இருக்கையில் ஷியாமின் பெற்றோர்கள் இருந்துள்ளனர். இவர்கள் கோவை சிட்கோ - ஈச்சனாரி நெடுஞ்சாலை மேம்பாலத்தில் சென்றுகொண்டு இருந்த போது, எதிர்திசையில் பேருந்து வந்துள்ளது. பேருந்தை முந்தியபடி வந்த லாரி, அதிவேகத்தில் காரின் மீது பயங்கரமாக மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில், கார் அப்பளம் போல நொறுங்கிவிட, காரில் இருந்த ஷியாம் உட்பட 4 பேரும் இடிபாடில் சிக்கி படுகாயம் அடைந்தனர். 

Coimbatore

விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி செல்ல, விபத்து குறித்து பிற வாகன ஓட்டிகள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஷியாம் பிரசாந்த் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், மஞ்சுளா, சுவாதி, சவுடையன் ஆகியோர் உயிருக்கு போராடியுள்ளனர். இவர்களை மீட்டு அதிகாரிகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மஞ்சுளா பரிதாபமாக உயிரிழந்தார். 

சுவாதி மற்றும் அவரின் மாமனார் சவுடையன் ஆகியோர் சுந்தரபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த இருதரப்பு உறவினர்களும் பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், அனைவரும் மருத்துவமனை வளாகத்தில் கதறியழுதது காண்போரை கண்கலங்க வைத்தது. மேலும், கடந்த 1 வாரமாக விழாக்கோலம் பூண்டிருந்த வீடு, இன்று துக்க நிகழ்வை சந்தித்துள்ளதால் அப்பகுதி மக்களும் சோகத்திற்கு உள்ளாகினர்.