ஒரே கம்பெனியில் புருஷன் - பொண்டாட்டி வேலை.. ஜோடியாக ரூ.47 இலட்சம் கொள்ளை..! சென்னையில் பகீர்.!!
சென்னையில் உள்ள தண்டையார்பேட்டை - திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் தனியார் பருப்பு கம்பெனி மேலாளர் ராஜகணேஷ், புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரில், "எங்களின் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்த தீபன்ராஜ் (வயது 32). இவர் ரூ.47 இலட்சத்து 80 ஆயிரத்தை மோசடி செய்து தலைமறைவாகியுள்ளார். அவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், 2 தனிப்படைகளை அமைத்து தீபன்ராஜை தேடி வந்தனர். இந்த நிலையில், பாரிமுனை அருகே தீபன்ராஜ் தனது மனைவியுடன் காரில் செல்கையில், தனிப்படை காவல் துறையினர் அவரை கைது செய்தனர். கொள்ளை சம்பவத்திற்கு உடந்தையாக அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவரின் மனைவி யுவராணியும் (வயது 32) இருந்தது அம்பலமானது.
மேலும், தீபன்ராஜ் மனைவியுடன் சேர்ந்து மோசடி செய்த பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துவிட்ட நிலையில், பணத்தை திருடிய பின்னர் விருதுநகரில் உள்ள பேக்கரியில் பணியாற்றி வந்துள்ளனர். கைது செய்யப்பட்ட கணவன் - மனைவியிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.