சென்னை மக்களே! மெட்ரோ தண்ணீர் வேண்டுமா? இதோ எளிய முறை.!

சென்னை மக்களே! மெட்ரோ தண்ணீர் வேண்டுமா? இதோ எளிய முறை.!


chennai - people metro water - online booking

கோடைகாலம் என்றாலே தமிழகத்தில் வருணபகவான் வஞ்சனை செய்யும் காலம் என்றாகிவிட்டது. அந்த அளவிற்கு வெயில் மக்களை  வாட்டி வதைக்கிறது. போதாத குறைக்கு ஆழ்துளை கிணறுகளில் இருந்த தண்ணீரும் தடம் தெரியாமல் சென்றுவிட்டது.

மோட்டார் சுவிட்சை ஆன் செய்தால் தண்ணீர் வருகிறதோ இல்லையோ போதுமான அளவு காற்று வருகிறது. இதனால் மக்கள் குடிதண்ணீருக்காக மிகவும் சிரமப்படுகின்ற அவலநிலை தினந்தோறும் தொடரும் தொடர்கதையாகிவிட்டது. 

தமிழகத்தைப் பொருத்தவரை சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மழை பொழிவதால் மக்களுக்கு சற்று ஆதரவாக உள்ளது. மேலும் கிராமப்புறப் பகுதிகளில் குளம், கண்மாய்களில் இருந்து வீட்டுத் தேவைகளுக்காக தண்ணீரை பெற்றுக் கொள்கின்றனர். ஆனால் சென்னையில் நிலைமை படுமோசமாக உள்ளது.

இந்நிலையில் குடிதண்ணீரை மட்டுமே விலைக்கு வாங்கிய நிலைமை மாறி அனைத்து தேவைகளுக்கும் தண்ணீரை வாங்க வேண்டிய சூழல் சென்னை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. 
இவைகளை களையும் நோக்கில் மெட்ரோ தண்ணீரை ஆன்லைனில் முன்பதிவு செய்து பெற்று கொள்ளும் வசதி நடைமுறையில் உள்ளது. அதன்படி, மெட்ரோ நீர் தேவைப்படும் மக்கள் https://chennaimetrowater.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம்.

metro water

அந்த இணையத்தின் முகப்பு பக்கத்தில் Book a Water tanker என்று இருக்கும் ஆப்ஷனை தேர்வு செய்து அந்த பக்கத்தில் முகவரி, தேவைப்படும் நீரின் கொள்ளவு உள்ளிட்ட விவரங்களை வழங்க வேண்டும்.

அதை தொடர்ந்து OTP என்ற ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய கடவு எண் குறுஞ்செய்தியில் கிடைக்கும். அதை கிடைத்தவுடன், மெட்ரோ தண்ணீருக்கான முன்பதிவு உறுதிசெய்யப்படும். முன்பதிவு உறுதிசெய்யப்பட்டவுடன் பயனாளரின் கைப்பேசிக்கு ரகசிய எண் வரும். மெட்ரோ நீர் பயனரின் வீட்டுக்கு கொண்டுவரப்படும் போது அந்த எண்ணை தெரிவிக்க வேண்டும். 

மேலும், 6,000.லி தண்ணீருக்கு ரூ. 475 மற்றும் 9,000.லி தண்ணீருக்கு ரூ. 700 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் உடனடியாக தேவைப்படுவோர் மெட்ரோ நீரை தட்கல் முறையிலும் பதிவு செய்யும் வசதி பயன்பாட்டில் உள்ளது.