தமிழகம்

ராணுவ வீரரின் குடும்பத்திற்கே இந்த நிலைமையா? தாய் மற்றும் மனைவி கொடூர கொலை! இறுதிசடங்கின் போது உறவினர்கள் கண்ட துயரக்காட்சி!

Summary:

Army man wife and mother killed for jewels

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே முக்கூரணி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சந்தியாகு. இவரது மனைவி ராஜகுமாரி. இவர்களுக்கு ஸ்ரீபன்ராஜ்,  ஜேம்ஸ் ராஜ் என்ற இருமகன்கள் உள்ளனர். இருவருமே ராணுவ வீரர்களாக எல்லையில் பணியாற்றி வருகின்றனர். மேலும் இவர்களின்  மூத்த மகன் ஸ்டீபன், லடாக் எல்லையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவரது மனைவி சினேகா தங்களது ஏழு மாத குழந்தையுடன்,  ஸ்டீபனின் தாய் தந்தையருடன் கிராமத்தில் வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சந்தியாகு தோட்ட காவல்வேலையாக சென்ற நிலையில் நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் சினேகா மற்றும் அவரது மாமியார் இருவரையும் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துவிட்டு,  வீட்டில் உள்ள 65 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்நிலையில் குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பத்தினர் சினேகா மற்றும் ராஜகுமாரி இருவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள்  இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து இதுகுறித்து லடாக்கில் இருக்கும் ஸ்டீபனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் ஊருக்கு விரைந்துள்ளார். இந்நிலையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு, சிவகங்கை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த இருவரது உடல்களையும் குடும்பத்தினர்கள் பெற்றபோது மிகவும் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இதனை கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் இருவருக்கும் இறுதிசடங்கு நடைபெற்றது. அப்பொழுது கதர் கிராமத் தொழில்கள் நலவாரியத் துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மலர்வளையம் வைத்து உயிரிழந்த இருவருக்கும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் மருத்துவமனையில் குளிர்சாதன இயந்திரம் முறையாக இயங்காததால் அவர்களின் உடல் அழுகிவிட்டது. இதனை  முன்கூட்டியே தெரிவித்திருந்தால் நாங்கள் ஏதாவது ஏற்பாடு செய்திருப்போம். ஒரு ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு இந்த நிலைமையா? என ஸ்ரீபனின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் ஆதங்கப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர் இதுகுறித்தும்,  அவர்களது கொலை குறித்தும் விரைவில் விசாரணை நடைபெறும் என தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement