நண்பனை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த ரவுடி; வலை வீசும் போலீசார்...!

நண்பனை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த ரவுடி; வலை வீசும் போலீசார்...!


A rowdy killed a friend by running away; The police throwing the web..

புதுவை ஜீவானந்தபுரம் பாரதிதாசன் வீதியில் வசித்து வருபவர் சாலமன் (23), இவர் பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் நான்கு மாதத்திற்கு முன் பிரியதர்ஷினி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று மதியம் 12.30 மணியளவில் தமிழக பகுதியான நாவற்குளத்தில் இருக்கும் டீக்கடை முன்பு நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் அவரை அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் துரத்தியது. உயிருக்கு பயந்து சாலமன் வேகமாக ஓடினார். 

இருந்தும் மூன்று வீதி தாண்டி எம்ஜிஆர் நகர் பிரியதர்ஷினி வீதியில் சாலமனை அந்த கும்பல் மடக்கிப் பிடித்து சரமாரி வெட்டியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. தகவலறிந்த கோரிமேடு காவல்துறையினர், விரைந்து வந்து விசாரித்தனர். அதன் பிறகு, உடலை கைப்பற்றி கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை நடந்த இடத்தில் செல்போன் ஒன்று கிடைத்தது. அதை கைப்பற்றி, அது யாருடையது என்பதை சோதனை செய்தனர். முதல்கட்ட விசாரணையில், புதுச்சேரி கோரிமேடு அடுத்த தமிழகப் பகுதியான நாவற்குளத்தை சேர்ந்த ரவுடி ரகு உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட கும்பல் இந்த கொலையை செய்தது என்று தெரியவந்தது. 

ரகு மீது தமிழகப் பகுதியில் கொலை மற்றும் பல வழக்குகள் இருக்கிறது. சாலமனும், ரகுவும் நண்பர்கள். இந்நிலையில் நண்பர்களில் ஒருவருக்கு ரகு பணம் கொடுத்துள்ளார். அந்த நண்பர் வாங்கிய பணத்தை திரும்பத் தராததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.  அந்த நண்பருக்கு ஆதரவாக சாலமன் செயல்பட்டதால், சாலமனுக்கும், ரகுவுக்கும் இடையே கடந்த சில நாட்களாக பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் சாலமன் வீட்டின் அருகில் சாலமனுடன், ரகு மற்றும் அவரது நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் ஆத்திரமடைந்த ரகு மற்றும் அவரது நண்பர்கள், அவரை ஓட, ஓட விரட்டி வெட்டி கொலை செய்துள்ளனர்.