நிறைமாத கர்ப்பிணிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த பட்டதாரி கணவன்.. இணையதள மோகத்தால் மனைவி உயிரிழப்பு.!
சமீப காலமாக இணையதள தாக்கம் மக்களிடையே அதிகமாக பரப்பப்பட்டு வருகிறது. உடல் எடையை குறிப்பிட்ட காலத்திலேயே குறைப்பது, முகத்தினை வெள்ளையாக மாற்றுவது போன்ற பல ஆபத்தை விளைவிக்கும் குறிப்புகள் இணையத்தில் பரவி வருகின்றன. இந்த குறிப்புகளை வீட்டிலேயே முயற்சி செய்து பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

சமீபத்தில் இயற்கை மருத்துவத்தின் மீதான ஆர்வம் பொது மக்களிடையே அதிகமாக காணப்படுகிறது. இதனால் யூ ட்யூப் போன்ற சமூக வலைத்தளங்களில் கொட்டிக் கிடக்கும் பல அங்கீகரிக்கப்படாத மருத்துவ குறிப்புகளை வீட்டிலேயே முயற்சி செய்து பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் ஆங்கில மருத்துவம் தவறானது என்ற முறையில் இணையத்தில் பரவி வரும் செய்தியினால் பல கடுமையான நோய்களுக்கும் இயற்கை மருத்துவத்தையே முயற்சி செய்து கடுமையாக அவதிக்குள்ளாகின்றனர். இவ்வாறு தர்மபுரி மாவட்டத்தைச் சார்ந்த மாதேஷ் (27) லோகநாயகி (27) கணவன் மனைவியான இவர்கள் யூடியூபை பார்த்து வீட்டிலேயே பிரசவத்தை செய்துள்ளனர்.

லோகநாயகி நிறை மாத கர்ப்பிணியாக இருந்ததால், இயற்கை மீது ஆர்வம் கொண்ட இவர்கள் மருத்துவமனைக்கு செல்லாமல் யூட்யூபை பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளனர். இதனால் அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டு மயக்க நிலைக்கு சென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு லோகநாயகி உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். மேலும் இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.