தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து.! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து.! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!



12 th exam cancelled

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே மூடப்பட்டது. இதனையடுத்து கொரோனா பரவல் காரணமாக 2020 -2021 கல்வியாண்டில் 1ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை அனைவருமே தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். 

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், சி.பி.எஸ்.இ. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் ரத்துசெய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அறிவித்தார். இதனையடுத்து மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்துசெய்வது குறித்து அந்தந்த மாநிலங்கள் ஆலோசித்து அறிவித்து வருகின்றன. 

இந்நிலையில், தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்களுடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தில் அனைத்து தரப்பினரும் மாணவர்களின் உடல் மற்றும் மனநலன் காக்கப்பட வேண்டும் என்று அரசிடம் வலியுறுத்தினர்.

இது குறித்த அறிக்கையை தயார் செய்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டானை சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கையை சமர்ப்பித்தார். இதன் அடிப்படையில் 12 ஆம் வகுப்பு தேர்வு குறித்த இறுதி முடிவை முதலமைச்சர் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில், தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவ நிபுணர்கள் வழங்கிய ஆலோசனைகளின் அடிப்படையில் மாணவர்களின் நலன் கருதி தேர்வு ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில், உயர்கல்வித்துறை செயலாளர், சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு பின்னர் அறிவிப்புகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.