விளையாட்டு

ஐபிஎல் தொடரில் சரியாக ஆடினாலும் தோனிக்கு இந்திய அணியில் வாய்ப்பில்லை - நெஹ்ரா கருத்து!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்காக கடந்த 2019, ஜூலை மாதம் முடிவடைந்த உலகக்கோப்பை தொடரில் விளையாடினார். அதன்பிற்கு 3 மாத ஓய்வு தேவை என்று கூறி சென்றவர் மீண்டும் அணிக்கு திரும்பவே இல்லை.

இந்நிலையில் இந்திய அணியில் தோனியின் எதிர்காலம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ஒருவேளை தோனி 2020 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினால் மீண்டும் இந்திய அணியில் இடம்பெறுவார் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதற்கு முரன்பட்ட கருத்தினை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், “வரும் ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே தோனிக்கு இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைக்கும் என்ற கருத்தை நான் நம்பவில்லை. ஏனெனில் ஐ.பி.எல். போட்டியில் அவர் ஆடுவதற்கும், சர்வதேச போட்டிக்கான அணியில் இடம் பிடிப்பதற்கும் எந்த தொடர்பும் கிடையாது. எனக்கு தெரிந்தவரை தோனி இந்திய அணிக்காக தனது கடைசி போட்டியை மகிழ்ச்சியுடன் விளையாடி முடித்து விட்டார் என்றே நினைக்கிறேன்.

மேலும் தோனியின் ஆட்டத்திறன் ஒரு போதும் குறையாது. அவர் விளையாட விரும்பினால், கேப்டனோ, பயிற்சியாளரோ, தேர்வாளரோ யாராக இருந்தாலும் அவரை முதல் ஆளாக அணியில் சேர்ப்பார்கள்" என்று கூறியுள்ளார்.


Advertisement