அமைச்சரின் கார் மீது செருப்பு வீசிய விவகாரம்: மேலும் 3 பெண்களை கைது செய்த தனிப்படை போலீசார்..!

அமைச்சரின் கார் மீது செருப்பு வீசிய விவகாரம்: மேலும் 3 பெண்களை கைது செய்த தனிப்படை போலீசார்..!



special police arrested 3 more women in the case of throwing slippers on the minister's car

பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் கடந்த 13 ஆம் தேதி காலை  தனி விமானம் மூலம் அவரது உடல் ஐதராபாத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் அன்று நண்பகல் 12.15 மணிக்கு மதுரைக்கு கொண்டு வரப்பட்டது.

வீரமரணமடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கார் மீது பா.ஜ.க-வினர் நேற்று காலணியை வீசினர். இந்த சம்பவம் தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தி.மு.க கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 6 பேருக்கும் வரும் 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய விவகாரத்தில், பா.ஜனதா கட்சியின் மகளிர் அணியை சேர்ந்த சரண்யா, தனலட்சுமி மற்றும் தெய்வானை ஆகிய 3 பெண்களை காவல்துறையின் தனிப்படையினர்  கைது செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக தல்லாகுளம் காவல் உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படையினர் திருமங்கலம் அருகே வாகை குளம் பகுதியில் பதுங்கியிருந்த 3 பெண்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 3 பெண்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர்  சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அமைச்சரின் கார் மீது காலணி வீசியவர் தனலட்சுமி என்பது தெரியவந்துள்ளது. முன்னதாக 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.