“திருமாவளவனை முதல்வராக்க நினைத்தது உண்மை தான்.. ஆனா.!” - சிவி சண்முகம் அதிரடி பேட்டி.!
C. V. சண்முகம் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அளித்து வரும் பேட்டிகள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளித்த விவகாரத்தில் ஏற்கனவே எடப்பாடி மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்த அவர், தற்போது மேலும் பல ரகசிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக பேசிய அவர், தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் 2 திமுக முன்னாள் அமைச்சர்கள் தன்னை தொடர்பு கொண்டதாகவும், மறுநாள் காலை எடப்பாடி பழனிசாமி “நாம் ஆட்சி அமைக்கப் போகிறோம், திமுக ஆதரவு தரும்” என்று கூறிய பிறகுதான் அந்த அழைப்புகளின் பின்னணி புரிந்ததாகவும் தெரிவித்திருந்தார். மேலும், புதுச்சேரி ரிசார்ட்டில் நடந்த பேச்சுவார்த்தைகள் குறித்து எடப்பாடி வெளிப்படையாக பேச முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது மேலும் அதிரடி தகவல்களை வெளியிட்டுள்ள சிவி சண்முகம், “திருமாவளவன் அவர்களை முதலமைச்சராக ஆக்குவோம் என்று திமுக ஒரு முன்னெடுப்பு செய்தது. அதேபோல் மற்ற 33 அமைச்சர்களும் அதிமுகவினர் ஆக இருப்பார்கள் என்றும் முடிவு எடுக்கப்பட்டது” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: “புஷ்பா பட பாணியில் ஆட்சி நடக்கிறது”... விஜய் அரசை கடுமையாக சாடிய உதயநிதி ஸ்டாலின்!
ஆனால் அந்த திட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்ளவில்லை என்றும், “நான்தான் முதலமைச்சராக இருக்க வேண்டும், இல்லை என்றால் எதிர்க்கட்சியாகவே செயல்படலாம்” என்று அவர் கூறிவிட்டதாகவும் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். “இறுதியில் அந்த பேச்சு அப்படியே முடிவுக்கு வந்தது” என்றும் அவர் கூறினார்.
மேலும் எடப்பாடியை கடுமையாக விமர்சித்த சிவி சண்முகம், “வெறும் 47 தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட்டு அதை பெரிய சாதனை போல பேசுகிறார். அவர் பொதுச்செயலாளராக இருக்க தகுதியற்றவர். தோல்வியை ஒப்புக்கொள்ள அவரது மனம் தயாராக இல்லை” என்று தாக்கியுள்ளார்.
அதோடு, “நாங்கள் பதவிக்காக கட்சி மாறினோம் என்று கூறுகிறார். அரசியலில் இருப்பவர்கள் எல்லோரும் பதவிக்காகத்தான் வருகிறார்கள். ஆனால் எங்களின் நோக்கமும், விஜய் தலைமையிலான தவெகவின் நோக்கமும் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதுதான். அதனால்தான் நாங்கள் தற்போது தவெகவிற்கு ஆதரவு கொடுத்துள்ளோம். திமுகவுடன் கூட்டணி அமைக்க எடப்பாடி எடுத்த முடிவில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அதனால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது” என்று பரபரப்பாக பேசியுள்ளார்.
இதையும் படிங்க: #அதிர்ச்சி : “திமுக EX அமைச்சர்கள் என்னிடம் பேசினார்கள்.. சிவி சண்முகம் அதிர்ச்சி தகவல்.!