உரக்க பேசினால் உண்மை ஆகிடுமா? உங்ககிட்ட ஆதாரம் இருக்கா... CM விஜய் பேச்சுக்கு அதிமுக கொடுத்த மரண மாஸ் பதிலடி..!!!
திருச்சி கிழக்கு தொகுதியில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் முதல்வரும் தவெக தலைவருமான விஜய் பேசிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் அவர் விமர்சித்த நிலையில், அதற்கு பதிலளித்துள்ள அதிமுக கடுமையான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
முதல்வரின் பேச்சு தற்பெருமையை வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ள அதிமுக, மாநிலத்தில் நடைபெறும் குற்றங்கள், மரணங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து பொறுப்பேற்காமல் அவர் பேசியதாக குற்றம்சாட்டியுள்ளது.
“முந்தைய ஆட்சியையே குறை சொல்வதா?”
அனைத்து பிரச்சினைகளுக்கும் முந்தைய ஆட்சிதான் காரணம் என முதல்வர் தொடர்ந்து கூறி வருவதை அதிமுக சாடியுள்ளது. இதைத்தான் ஆட்சி மாற்றம் என்று கூறுகிறீர்களா என கேள்வி எழுப்பியுள்ள அந்தக் கட்சி, ஆட்சியில் இருக்கும் ஒருவர் தனது செயல்பாடுகளுக்குப் பதில் அளிக்க வேண்டுமே தவிர பழைய நிர்வாகத்தை மட்டுமே குற்றம் சாட்டக் கூடாது என தெரிவித்துள்ளது.
தன்னை ஆட்சிக்கு வரவிடாமல் கூட்டுச் சதி நடந்ததாக முதல்வர் கூறியிருப்பதையும் அதிமுக விமர்சித்துள்ளது. அந்த குற்றச்சாட்டுகளுக்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா என்றும், சினிமா வசனம் போல உரக்கப் பேசுவதால் பொய்கள் உண்மையாக மாறாது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குதிரை பேரம் குறித்த குற்றச்சாட்டு
தவெக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே குதிரை பேர அரசியலில் ஈடுபட்டதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு அமமுக சட்டமன்ற உறுப்பினர் தொடர்பான கையெழுத்து வீடியோவே சாட்சி எனவும் கூறியுள்ளது.
மேலும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை அதிகார பலத்தால் விலைபேசி ராஜினாமா செய்ய வைத்து, பின்னர் தவெகவில் இணைத்துக் கொண்டதாகவும் அந்தக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இந்த விவகாரம் குறித்து முதல்வர் ஏன் விளக்கம் அளிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
காரசாரமான விமர்சனங்கள்
24 மணி நேரமும் அதிமுகவில் இருந்து யாரை தங்கள் பக்கம் இழுக்கலாம் என்ற எண்ணத்திலேயே தவெக செயல்படுவதாகவும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத விவகாரத்தில் திமுகவை விடவும் தவெக முன்னிலை வகிப்பதாகவும் அதிமுக விமர்சித்துள்ளது.
எல்லோரையும் எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது என்று எச்சரித்துள்ள அதிமுக, உலகமே தங்களைச் சுற்றியே இயங்குவது போல தொடர்ந்து புலம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், முதல்வரின் தனிப்பட்ட வாழ்க்கை அல்லது அவர் எங்கு வீடு வாங்குகிறார் என்பது குறித்து தங்களுக்கு எந்த அக்கறையும் இல்லை என்றும் அந்த அறிக்கையில் காரசாரமாகக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அந்த ஒரு பேச்சால்... கோபத்தின் உச்சிக்கே சென்ற முதல்வர் விஜய்! பின்னணி காரணம் என்ன?