விஜய் - திரிஷா சர்ச்சை.. அந்த காரை இப்போ யாரு வச்சிருக்கா? - விமலின் நக்கல் பதில்.!
பெற்றோர்களே எச்சரிக்கை.. குழந்தைகளுக்கு அடிக்கடி வயிறு வலிக்கிறதா?.. இந்த அறிகுறிகளை தவறவிடாதீங்க.!
குழந்தைகளை அடிக்கடி வயிறு வழிப்பதற்கான காரணம் என்ன? அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து இந்தப்பதிவில் காணலாம்.
ஒவ்வொரு தினமும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் ஆரோக்கியம் கல்வி வளர்ச்சிக்கும், சமூக ஒழுக்கத்திற்கும் மிகவும் முக்கியமானது. ஆனால் பல குழந்தைகளுக்கு சுகாதார குறைபாடுகள் ஏற்படுவது பொதுவான ஒன்றாக இருக்கிறது. அதில் அதிகமாக காணப்படுவது குடற்புழு தொற்று. சுத்தமின்மை மற்றும் தவறான உணவு பழக்கங்களால் இந்த பிரச்சனை உருவாகிறது. குடற்புழு தொற்று ஏற்பட்டால் குழந்தைகளின் உடல் வளர்ச்சி பாதிக்கப்படலாம்.
குழந்தைகளை தாக்கும் குடற்புழு:
உணவு சரியாக செரிமானம் ஆகாமல் போகும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவது மட்டுமின்றி குழந்தைகளின் கவனம், படிப்பு திறன் போன்றவற்றிலும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. குடற்புழு என்பது மனித குடலில் வாழும் சிறிய புழுக்களை குறிக்கிறது. இது எந்த வயதினருக்கும் ஏற்படலாம். பெரும்பாலும் பள்ளி வயது குழந்தைகளிடையே அதிகமாக காணப்படுகிறது. இதில் ரவுண்ட்வோர்ம், ஹூக் வோர்ம், பின் வோர்ம் மற்றும் டேப் வோர்ம் போன்ற பல வகைகள் உள்ளன.
இதையும் படிங்க: 'மழைநீரில் வெறும் காலில் நடக்காதீங்க'.. வைரஸ் அபாயம்.. தமிழக சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை.!
காரணம் என்ன?
இவை சில நேரங்களில் உடலின் ரத்தத்தை உறிஞ்சி ரத்த சோகை போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தக்கூடும். மண்ணில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்களை சுத்தமாக கழுவாமல் சாப்பிடுவது குடற்புழு தொற்றிற்கு முக்கிய காரணமாக அமைகிறது. அதுபோல செருப்பு அணியாமல் வெறும் காலில் மண்ணில் நடப்பதாலும் புழுக்கள் உடலுக்குள் செல்ல வாய்ப்பு உள்ளது. கைகளை சோப்பால் கழுவாமல் உணவு உண்ணுதல், விரல்களை வாயில் வைப்பது, மாசுபட்ட தண்ணீர் குடிப்பது போன்ற பழக்கங்களும் இந்த தொற்றை ஏற்படுத்தும்.

ஆரோக்கியம் பாதிப்பு:
பள்ளி குழந்தைகளில் இந்த பிரச்சனை அதிகம் காணப்படுவதற்கான காரணம், அவர்கள் வெளியே விளையாடிவிட்டு கைகளை சுத்தம் செய்யாமல் உணவு உண்ணுவதால் தான். மேலும் நகங்களை நீளமாக வைத்திருப்பதும் ஒரு காரணமாகும். நகங்களில் இருக்கும் அழுக்குகள் வாயில் செல்வதால் குடற்புழு உருவாக வாய்ப்பு உள்ளது. குடற்புழு தொற்றின் ஆரம்ப அறிகுறிகளாக வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, பசியின்மை போன்றவை இருக்கின்றன.
அறிகுறிகள்:
சில நேரங்களில் உடல் எடை குறைவு, ரத்த சோகை, தூக்கமின்மை, சோர்வு போன்ற அறிகுறிகளும் ஏற்படும். மலத்தில் புழுக்கள் காணப்படுதல் அல்லது மலவாயில் அரிப்பு ஏற்படும் பட்சத்தில் மருத்துவரை அணுகுவது நல்லது. அரிதான நிலையில் கல்லீரல் அல்லது நுரையீரல் போன்ற பகுதிகளுக்கும் செல்ல வாய்ப்பு உள்ளது. இதனால் மூச்சுத்திணறல் அல்லது மஞ்சள் காமாலை போன்ற பிரச்சனைகளும் உருவாகலாம்.
தடுப்பு முறைகள்:
இந்த பிரச்சனையை தடுப்பதற்கு சில எளிய பழக்கவழக்கங்களை கடைபிடிப்பது அவசியம். உணவு உண்ணும் முன் மற்றும் கழிப்பறை பயன்படுத்திய பிறகு கைகளை சோப்பால் நன்றாக கழுவ வேண்டும். சுத்தமான தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும். காய்கறி, பழங்களை நன்றாக கழுவி சாப்பிட வேண்டும். வெளியே செல்லும் போது காலணியை அணிவது நல்லது. நகங்களை அதிகமாக வளரவிடாமல் குறைவாக வைத்திருப்பதும் முக்கியம்.
பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியமானது. எளிய சுகாதார பழக்கவழக்கங்களை கடைபிடித்தாலே இந்த பிரச்சனையை பெரும்பாலும் தவிர்க்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.