ரூபாய் 1500-க்காக நண்பனை கொலை செய்த வாலிபர்! மதுரையில் பரபரப்பு

boy killed for 1500 rupees


boy killed for 1500 rupees

மதுரை கீரைத்துறை கிருதுமால் நதிக்கரை சாலையைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் சதீஷ்குமார் (வயது 17). ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ள சதீஷ்குமார் திருப்பூரில் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு சதீஷ்குமார் அதே பகுதியைச் சேர்ந்த முத்து என்பவரிடம் ரூ.1500 கடன் வாங்கியுள்ளார். ஆனால் சதீஷ்குமார் அதை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தவில்லை.

இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு சதீஷ்குமார் திருப்பூரிலிருந்து தீபாவளிக்காக மதுரை வந்துள்ளார். அவரை பார்த்த முத்து தனது பணத்தை திருப்பித் தரும்படி கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் தன் நண்பர்களுடன் சேர்ந்து முத்து, சதீஷ்குமாரை கொலை செய்துள்ளதாக தெரிகிறது. சதீஷ்குமாரின் உடல் NMR பாலத்தின் கீழே இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய படம்

இதுகுறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில் "முத்து தன் நண்பர்களுடன் தெற்குவாசல் பாலத்தின் கீழ் மது அருந்தியதாகவும் அந்த சமயத்தில் சதீஷ்குமாரை அங்கு வரவழைத்து உள்ளதாகவும் தெரிகிறது. அவர்களுடன் சேர்ந்து மது அருந்திய சதீஷ்குமாரிடம் முத்து பணத்தை திருப்பி கேட்கவே இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது மோதலாக மாறி ஆத்திரமடைந்த முத்து, சதீஷ்குமாரை பீர் பாட்டிலாலும் கத்தியால் குத்தி உள்ளார். இதனால் படுகாயமடைந்த சதீஷ்குமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார். அதன்பின் அவருடன் இருந்த நண்பர்கள் தப்பி ஓடிவிட்டனர்".

இதுகுறித்து தப்பி ஓடிய முத்து மற்றும் அவரது ஐந்து நண்பர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்