ஒரு தலைக்காதல் எதிரொலி: திருமணம் செய்ய மறுத்த இளம்பெண்ணை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்..!

ஒரு தலைக்காதல் எதிரொலி: திருமணம் செய்ய மறுத்த இளம்பெண்ணை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்..!


young man shot a young woman who refused to marry him

அரியானா மாநிலம், குருகிராம் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் கடந்த 25 ஆம் தேதி காலை சுமார் 9 மணிக்கு வேலைக்கு செல்வதற்காக மனிசர் என்ற பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த இளம்பெண்ணை அபே ஷர்மா என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்துள்ளார். பின்னர் அவரை இடைமறித்த அபே ஷர்மா தன்னிடம் பேசும்படியும், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படியும் வற்புறுத்தியுள்ளார்.

அந்த இளம்பெண் அபே ஷர்மாவை திருமணம் செய்துகொள்ள மறுத்துள்ளார். இதன் காரணமாக, இளம்பெண்ணுக்கும், ஷர்மாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அபே ஷர்மா தான் மறைத்துவைத்திருந்த துப்பாக்கியை எடுத்து  அந்த இளம்பெண்ணை சுட்டுள்ளார். எதிர்பாராமல் நடந்த  துப்பாக்கிச்சூட்டில் கழுத்தில் குண்டு பாய்ந்ததில், படுகாயமடைந்த இளம்பெண் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

அவரை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்த காவல் துறையினர் மருத்துவமனைக்கு வந்து இளம்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், இளம்பெண் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பியோடிய ஷர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவரை கைது செய்யும் நடவடிக்கைகளை காவல்துறையினர் துரிதப்படுத்தினர். தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு அபே ஷர்மா கடந்த 2 ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். இதன் பின்னர், கைது செய்யப்பட்ட ஷர்மாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.