காதல் கணவனை குடும்பத்துடன் சேர்ந்து போட்டுத்தள்ளிய மனைவி.. அதிர்ச்சிதரும் காரணம்.!
காதலித்து கரம்பிடித்த கணவன் சூதாட்டத்தில் ஈடுபாடு கொண்ட காரணத்தால் நடந்த கொலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள எட்டவாஹ் மாவட்டம், பவுப்போரா பகுதியில் வசித்து வருபவர் ஜிதேந்திர குமார் (வயது 33). இவர் மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்து வருகிறார். வேலைக்காக அங்குள்ள கைலாசபுரம் பகுதியில் வீடு எடுத்து மனைவியுடன் வசித்து வருகிறார். ஜிதேந்தரின் மனைவி ஜோதி, அரசு போக்குவரத்து கழக நடத்துனர் ஆவார்.
மகிழ்ச்சியான வாழ்க்கையில் திடீர் சோகம்:
தம்பதிகள் இருவரும் சுமார் 9 ஆண்டுகளாக காதலித்து கரம்பிடித்தவர்கள் ஆவார்கள். இருவரும் பள்ளிப்பருவ காதலர்களாக இருந்த நிலையில், பின் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். கடந்த 2025 நவம்பர் மாதத்தில் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 9 ஆண்டுகால காதலியை கரம்பிடித்த மகிழ்ச்சியில் ஜிதேந்திர குமார் வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். இதனிடையே, கடந்த ஜனவரி 26, 2026 அன்று ஜிதேந்தர் குமார், வீட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டவாறு சடலமாக மீட்கப்பட்டார்.
பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி:
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து ஜிதேந்திர குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஜோதியிடம் நடந்த விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதில்கள் வந்துள்ளன. பிரேத பரிசோதனையில் ஜிதேந்திர குமார் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

உயிரைப்பறித்த சூதாட்டம்:
இதனால் ஜோதியிடம் நடந்த கிடுக்குபிடி விசாரணையில், ஜோதியின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் சேர்ந்து ஜிதேந்தரை கொலை செய்தது அம்பலமானது. சூதாட்டத்தில் ஈடுபாடு கொண்ட ஜிதேந்தர், சம்பாத்தியம் செய்த பணம் அனைத்தையும் சூதாட்டத்தில் முதலீடு செய்து வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் வேலைக்கும் செல்லாமல் மனைவியின் பணத்தை எடுத்து முதலீடு செய்துள்ளார். இதனால் மருமகனுக்கு புத்திமதி கூற வந்தவர்கள், வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்து கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, ஜோதி மற்றும் அவரது பெற்றோர், உறவினர்களை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.