என்ன மனுஷன்யா இவரு..? உயிருடன் இருக்கும்போதே தனக்குத்தானே 13-ம் நாள் காரியம் செய்த 80 வயது முதியவர்..! பின்னணி அதிரவைக்கும் காரணம்... வியக்கவைக்கும் சம்பவம்..!!!
உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில், 80 வயது முதியவர் ஒருவர் உயிருடன் இருக்கும்போதே தனக்கான 13-ம் நாள் இறுதிச் சடங்கை நடத்தி முடித்துள்ளார். மறைவுக்குப் பிறகு தனது ஒரே மகளுக்கு எந்தப் பொருளாதாரச் சுமையும் ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுத்ததாகக் கூறியுள்ளார். அவரது வித்தியாசமான செயல் அந்தக் கிராமத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகளுக்கு சுமை ஏற்படக்கூடாது என முடிவு
பாக்பத் மாவட்டம் பரவுத் தாலுகாவுக்கு உட்பட்ட ஜோஹ்ரி கிராமத்தைச் சேர்ந்தவர் சவுத்ரி பல்ஜோர் சிங். இவருக்கு ஆண் வாரிசுகள் இல்லை. பிங்கி என்ற ஒரே மகள் உள்ளார். தனது மறைவுக்குப் பிறகு இறுதிச் சடங்குகளை நடத்துவதற்காக மகள் செலவு செய்ய வேண்டிய நிலை வரக்கூடாது என்று நினைத்த அவர், தானே உயிருடன் இருக்கும்போதே அந்தச் சடங்குகளைச் செய்ய முடிவு செய்துள்ளார்.
900 பேருக்கு விருந்து; பேரனுக்கு குடும்பப் பொறுப்பு
கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் பாரம்பரிய முறைப்படி யாகம் வளர்த்து சடங்குகளை நடத்தியுள்ளார் பல்ஜோர் சிங். இதில் உறவினர்கள், கிராம மக்கள் என சுமார் 900 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மதிய விருந்து அளிப்பதற்காக 8 சமையல்காரர்கள் நியமிக்கப்பட்டு பல்வேறு பாரம்பரிய உணவுகள் தயாரிக்கப்பட்டன.
நிகழ்ச்சியின் போது தனது 10 வயது பேரன் முகுலுக்குத் தலைப்பாகை அணிவித்து குடும்பப் பொறுப்புகளையும் ஒப்படைத்துள்ளார். மேலும், தனக்குச் சொந்தமான 1.25 ஏக்கர் நிலத்தையும் பேரன் பெயருக்கு எழுதி வைத்துள்ளார்.
தந்தையின் முடிவுக்கு மகள் ஆதரவு
தந்தையின் இந்த முடிவு குறித்து பேசிய மகள் பிங்கி, இதில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும், அவரது விருப்பம் நிறைவேறியதில் மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார்.
தனது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் முன்னிலையில் பல்ஜோர் சிங் நடத்திய இந்த நிகழ்வு அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது. மகளுக்கு சுமை ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தில் அவர் எடுத்த முடிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.