போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையானதால் நேர்ந்த கொடூரம்... தந்தையை அடித்துக் கொன்ற மகன்...!



The brutality that happened due to drug addiction, the son beat his father to death...

போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையான மகன், போதை மருந்து வாங்க தந்தை பணம் தராததால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி சுபாஷ் பிளேஸில் தகராறு நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்ததையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் முதியவர் ஒருவர் காதில் ரத்தம் வர மயங்கி கிடப்பதை பார்த்தனர். உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பலியானவர் ஷகுர்பூர் கிராமத்தில் வசித்து வரும் சுரேஷ்குமார் என்பவர் என்று தெரியவந்தது. வடமேற்கு டெல்லியின் சுபாஷ் பிளேஸில், சுரேஷ்குமாருக்கும் போதை பழக்கத்திற்கு அடிமையான அவருடைய மகன் அஜய்க்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. 

அஜய் தனது தந்தையிடம் போதை மருந்து வாங்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். சுரேஷ்குமார் பணம் தர மறுத்ததால், ஆத்திரத்தில் அஜய் அவரை அடித்து கொலை செய்துள்ளார். இதை தொடர்ந்து காவல்துறையினர் அஜய் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

போதை மருந்து வாங்க பணம் தர மறுத்தால், மகன், தந்தையை அடித்துக் கொலை செய்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.