இந்தியா

குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்! டெல்லியில் 4 பேருந்துகள் எரிப்பு!

Summary:

protest in delhi


நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு எதிராக அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில், பெரும் போராட்டம் வெடித்துள்ளது.

குடியுரிமை சட்டம் திருத்தப்பட்டதைக் கண்டித்து டெல்லியில் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிவடைந்தது. அதேபோல அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போதும் தடியடி நடத்தப்பட்டது. 

டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது டெல்லி போக்குவரத்து கழகத்தின் 4 பஸ்களை ஒரு கும்பல் தீவைத்து கொளுத்தியது. மேலும், தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. 

இதைத்தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். இதில் 35 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மாணவர்களை தாக்கிய காவலர்களை கண்டித்து டெல்லி காவல் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, மாணவர் அமைப்பினர் விடிய விடிய போராட்டம் நடத்தினர்.
 


Advertisement