இந்தியா

கண்கலங்கவைக்கும் அவலம்! 3 நாளில் 30க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள்.. ஆம்புலன்ஸிலேயே மகன் கண்முன்னே நேர்ந்த துயரம்!!

Summary:

நாடு முழுவதும் தற்போது கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வர

நாடு முழுவதும் தற்போது கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மேலும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளில் படுக்கை வசதி தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு போன்றவை ஏற்பட்டு மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மைசூரு, ஆலனஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் சுந்தரம்மா. 75 வயது நிறைந்த இவர் வயது மூப்பின் காரணமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.

 இந்த நிலையில் சுந்தரம்மாவின் மகன் நிகில் அவரை தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பாதிப்பு இல்லை என தெரிய வந்தது. ஆனாலும் மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லை என கூறி சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில் மூன்று நாட்களாக நிகில் மைசூரில் உள்ள 30 க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைக்கு தனது அம்மாவை அழைத்துச் சென்றுள்ளார்.ஆனால் படுக்கை வசதி, வெண்டிலேட்டர் வசதி இல்லை என கூறி சிகிச்சை அளிக்க மறுத்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை ஆம்புலன்சிலேயே மகன் கண்முன்னே சுந்தரம்மாள் உயிரிழந்துள்ளார். இதனை கண்ட நிகில் கதறி அழுதுள்ளார். பின்னர் சுந்தரம்மாவின் உடல் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதி சடங்கு செய்யப்பட்டது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement