நான் போட்டது கருப்பு..! ஆனால் அடியில் வந்ததோ வெள்ளை.... ஷூவால் பெண்ணுக்கு ரூ. 12,000 இழப்பீடு வழங்க அமேசானுக்கு கோர்ட் விடுத்த உத்தரவு...!!!



kerala-consumer-court-fines-amazon-refund-case

ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக வேறு பொருள் கிடைத்து, அதைத் திருப்பி அனுப்பியும் பணம் திரும்ப வராத பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. அத்தகைய ஒரு வழக்கில், கேரளாவின் கண்ணூரைச் சேர்ந்த பெண் பொறியாளருக்கு ஆதரவாக தீர்ப்பளித்த நுகர்வோர் நீதிமன்றம், அமேசான் நிறுவனத்திற்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.

ஆர்டர் செய்த காலணிக்கு பதிலாக வேறு பொருள்

கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிமா என்ற பொறியாளர், கடந்த 2025 செப்டம்பரில் அமேசான் தளத்தில் ₹1,945 மதிப்பிலான கருப்பு நிற பிராண்டட் காலணியை ஆர்டர் செய்திருந்தார். ஆனால், விளம்பரத்தில் காட்டப்பட்ட தயாரிப்புக்கு பதிலாக வெள்ளை நிற அடிப்பாகம் கொண்ட வேறு காலணி அவரிடம் டெலிவரி செய்யப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த அவர், மறுநாளே அந்தப் பொருளை திருப்பி அனுப்பினார்.

இதையும் படிங்க: ஏழை பெண்கள் எதிக்கொள்ளும் துயரம்! தமிழக ரேஷன் கடைகளில் இலவசமான சேனிட்டரி நாப்கின்....! உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு.!!

ரீஃபண்ட் மறுக்கப்பட்டதால் நீதிமன்றத்தை நாடிய வாடிக்கையாளர்

திருப்பி அனுப்பிய பொருள் தங்களுக்கு வந்து சேரவில்லை என்று கூறி ரீஃபண்ட் வழங்க அமேசான் மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பண இழப்பு மற்றும் மன உளைச்சலுக்கு நீதி கோரி அனிமா மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் முன் வழக்கு தொடர்ந்தார்.

இழப்பீடு வழங்க 30 நாட்கள் அவகாசம்

வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றத் தலைவர் ரவி சுஷா மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய அமர்வு, அமேசான் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தும் அவர்கள் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை என்று குறிப்பிட்டது. இதனால் புகாரில் உண்மை இருப்பதாக ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், காலணிக்கான ₹1,945-ஐ வாடிக்கையாளருக்கு திருப்பி வழங்க உத்தரவிட்டது.

மேலும், சேவைக் குறைபாட்டால் ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ₹8,000 இழப்பீடும், வழக்குச் செலவுக்காக ₹4,000-மும் சேர்த்து மொத்தம் ₹12,000-ஐ 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆதாரமின்றி வாடிக்கையாளர்களின் ரீஃபண்ட் உரிமையை மறுக்க முடியாது என்பதை இந்தத் தீர்ப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: 50 லட்சம் இன்சூரன்ஸ் எடுத்த 5 நாளில் மாரடைப்பால் இறந்த மனைவி! தில்லாலங்கடி வேலை பார்த்த எச்டிஎஃப்சி-க்கு நுகர்வோர் நீதிமன்றம் கொடுத்த ஷாக் ட்ரீட்மென்ட்..!!!