அழகிகளுடன் நட்சத்திர ஓட்டலுக்கு வந்த முன்னாள் எம்பி-ன் மகன் வெறிச்செயல்; வைரலாகும் பரபரப்பு வீடியோ காட்சி



former-mp-son-threatened-girl-in-5-star-hotel-with-gun

டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் எம்பி ராகேஷ் பாண்டேவின் மகன் ஆஷிஷ் பாண்டே ஒரு பெண்ணை துப்பாக்கியை காட்டி மிரட்டி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த சம்பவத்தின் போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ கன்வர் கரண் சிங் அவர்களின் மகன் கௌரவ் அங்கு இருந்துள்ளார். கௌரவ் மற்றும் அவருடன் வந்திருந்த பெண் ஆகியோரை தான் ஆஷிஷ் பாண்டே துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார்.

மூன்று பெண்களுடன் நட்சத்திர ஹோட்டலுக்கு வந்த ஆஷிஷ் பாண்டே முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏவின் மகனுடன் ஏற்பட்ட தகராறில் இத்தகைய வெறிச் செயலை செய்துள்ளார். 

இதனை பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ கன்வர் கரண் சிங் "உத்திரபிரதேசம் லக்னோவைச் சேர்ந்த ஆஷிஷ் பாண்டே அடிக்கடி பெண்களுடன் தலைநகரான டெல்லிக்கு வந்து கும்மாளம் அடிப்பதாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நட்சத்திர ஓட்டலுக்கு  வந்திருந்த அவர் என் மகனுடன் ஏற்பட்ட தகராறில் என் மகனையும் அவரோடு வந்திருந்த பெண்ணையும் துப்பாக்கியை காட்டி மிரட்டி உள்ளார்.


இதனால் மிகவும் அச்சத்திற்கு உள்ளான எனது மகன் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார். இதில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்பதால் சற்று நிம்மதியாக உள்ளது. அங்கு அப்போது நடைபெற்ற இந்த கோரச் சம்பவத்தை நேரில் பார்த்த ஹோட்டல் ஊழியர்களும் மிகவும் அச்சமடைந்துள்ளனர். சிலர் ஆஷிஷ் பாண்டேவை அங்கிருந்து செல்லுமாறு வற்புறுத்தியுள்ளனர்.

அதன் பின்னர் ஆஷிஷ் பாண்டே தன்னுடன் வந்த பெண்களை அழைத்துக்கொண்டு அவரது காரில் கிளம்பியுள்ளார். 

அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வைரல் ஆகவே அதையே சாட்சியாக வைத்து வழக்குப்பதிவு செய்த டெல்லி போலீசார் ஆஷிஷ் பாண்டேவை வலைவீசி தேடி வருகின்றனர். அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாத வண்ணம் அனைத்து விமான நிலையங்களிலும் எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும் உத்திரபிரதேச காவலர்களின் உதவியையும் நாடியுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.