வெள்ளத்தில் மிதக்கும் அசாம்! வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாமுக்கு உதவ பிரதமர் மோடி உறுதி!

வெள்ளத்தில் மிதக்கும் அசாம்! வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாமுக்கு உதவ பிரதமர் மோடி உறுதி!



Flood in assm

அசாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கனமழை காரணமாக பிரமபுத்திரா மற்றும் அதன் கிளை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அசாமில் மொத்தம் உள்ள 33 மாவட்டங்களில் 26 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. 30 லட்சத்துக்கும் அதிகமானோர் வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் சுமார் 3000 கிராமங்கள் பெரும் பாதிப்பில் சிக்கியுள்ளன. வெள்ளத்தால் வீடுகள், சாலைகள், விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு சுமார் 47 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பலர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Assam

அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசிய பூங்கா வெள்ளத்தால் நீரில் மூழ்கியது. உலகிலேயே ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் அதிக அளவில் இருக்கும் இடம் இந்த காசிரங்கா தேசியப் பூங்காதான். வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான வனவிலங்குகள் தங்கள் வாழ்விடங்களை விட்டு மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்குள் தஞ்சம் அடைந்தன. மேலும் தேசிய பூங்காவில் உள்ள ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் உள்பட 100க்கு மேற்பட்ட விலங்குகள் இறந்தன.

இந்நிலையில், அங்கு ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 110 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது. மேலும் 27 லட்சம் விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாமில் ஏற்பட்ட வெள்ளம், கொரோனா பாதிப்பு தொடர்பான நிலைமை மற்றும் பக்ஜன் எண்ணெய் கிணற்றில் ஏற்பட்ட தீ விபத்து பற்றிய தகவல்களைப் பெற மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தொலைபேசி உரையாடலை மேற்கொண்டதாக அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் ட்வீட் செய்துள்ளார்.