பள்ளி மாணவி மீது ஆசிட் வீச்சு!.. நட்ட நடு தெருவில் நடந்த கொடூரம்: 3 பேரை கட்டம் கட்டிய போலீசார்..!

பள்ளி மாணவி மீது ஆசிட் வீச்சு!.. நட்ட நடு தெருவில் நடந்த கொடூரம்: 3 பேரை கட்டம் கட்டிய போலீசார்..!


delhi-police-has-arrested-three-people-who-threw-acid-o

பள்ளி மாணவி மீது ஆசிட் வீசிய மூன்று பேரை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேற்கு டெல்லி, உத்தம்நகர் அருகேயுள்ள மோகன் கார்டன் பகுதியில் நேற்று காலை 7.30 மணியளவில்  பள்ளி மாணவி ஒருவர் தனது தங்கையுடன் நடந்து சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனம் ஒன்றில் அவர்களை பின்தொடர்ந்து வந்த இருவரில் பின் இருக்கையில் அமர்ந்திருந்தவர், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சிறுமியின் முகத்தில் ஆசிட்டை ஊற்றியுள்ளார். இதனால் மாணவி வலியில் அலறித்துடித்தார்.

இதனையடுத்து அந்த மாணவியின் தங்கை அருகே உள்ள தங்களது வீட்டுக்கு சென்று தந்தையிடம் சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகளை மீட்டதுடன் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். ஆசிட் வீச்சில் மாணவிக்கு முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது இரு கண்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து, மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர். ஆசிட்  வீசிய இருவரும் முகத்தை துணியால் மூடியிருந்தாலும் அவர்கள் யாராக இருக்கக்கூடும் என்ற தனது சந்தேகத்தை மாணவி தெரிவித்துள்ளார். சந்தேகத்தின் அடிப்படையிலும், சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையிலும், மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.