கொழுப்பு குறைக்க நடைப்பயிற்சியா? படிக்கட்டு ஏறுதலா? எது நல்லது?
கொழுப்பை குறைக்க நடைப்பயிற்சியா அல்லது படிக்கட்டுகளில் ஏறுதலா? அதிக கலோரிகளை எரிக்கும் பயிற்சி எது, யாருக்கு எது பொருத்தம் என்பதை விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.
உடற்பயிற்சி:
இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் உடற்பயிற்சிக்கென தனியாக நேரம் ஒதுக்குபவர்கள் குறைந்து வருவது கவலைக்குரிய விடயமாகும். உடலில் தேங்கும் கொழுப்பை குறைக்கவும், கூடுதல் கலோரிகளை எரிக்கவும் எளிய மற்றும் செலவில்லாத பயிற்சிகளை மக்கள் அதிகம் நாடுகின்றனர். அவற்றில் நடைப்பயிற்சி மற்றும் படிக்கட்டுகளில் ஏறுதல் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. இவ்விரண்டிலும் எது அதிக பலன் தரும் என்ற கேள்வி பலரிடமும் எழுகிறது.
இதையும் படிங்க: ஓ.. இதுதானா! ஆண்களின் வயிறு பெருதாவதற்கு உண்மையான காரணம் என்ன தெரியுமா? இனி கவனமா இருங்க...

நடைப்பயிற்சி:
நடைப்பயிற்சி எளிமையானதுடன் பாதுகாப்பான உடற்பயிற்சியாகும். குறிப்பாக வேகமாக நடப்பது இதயத் துடிப்பை உயர்த்தி அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. இது உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக்கி, மனஅழுத்தத்தை குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அனைத்து வயதினரும் எளிதில் மேற்கொள்ளக்கூடிய பயிற்சியாக இது திகழ்கிறது. நீண்ட நேரம் சோர்வில்லாமல் செய்ய முடிவதால், தொடர்ச்சியான கலோரி எரிப்புக்கு நடைப்பயிற்சி சிறந்த தேர்வாக கருதப்படுகிறது.
படி ஏறுதல்:
மாறாக, படிக்கட்டுகளில் ஏறுவது நடைப்பயிற்சியைவிட சற்றே கடினமானது. ஆனால் இடுப்பு, கால் தசைகள் மற்றும் உடலின் மைய தசைப்பகுதிகளுக்கு அதிக அழுத்தம் வழங்குவதால் அதிக சக்தி செலவாகி, அதிக கலோரிகள் எரிக்கப்படுகின்றன. இதனால் வேகமாக கொழுப்பை குறைக்க விரும்புபவர்களுக்கு இது பயனளிக்கக்கூடியதாகும். கால்களுக்கு வலிமை சேர்த்து, உடலுக்கு கூடுதல் சக்தி அளிக்கும் திறனும் இதற்கு உள்ளது.

எது யாருக்கு நல்லது?
அதிக கலோரிகளை எரிக்க வேண்டுமெனில் படிக்கட்டுகளில் ஏறுதல் முன்னிலை வகிக்கிறது. மூட்டு வலி அல்லது கால்வலி போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் நடைப்பயிற்சியைத் தேர்வு செய்வது பாதுகாப்பானதாகும், ஏனெனில் இது மூட்டுகளுக்கு குறைந்த அழுத்தம் அளிக்கிறது. உடல்நலப் பிரச்சனைகள் இல்லாதவர்கள், வேகமாக கொழுப்பை குறைக்க விரும்புபவர்கள் படிக்கட்டு ஏறும் பயிற்சியை மேற்கொள்ளலாம். ஆனால் ஒவ்வொருவரின் வயது, உடல்நிலை, உடல் எடை மற்றும் இலக்கு ஆகியவற்றை கருத்தில் கொண்டு உடற்பயிற்சி நிபுணருடன் ஆலோசித்து சரியான பயிற்சியைத் தேர்வு செய்வது அவசியம்.
இதையும் படிங்க: Cow Vs Buffalo Milk: பசும் பால் Vs எருமை பால்.. குழந்தைகளுக்கு எது சிறந்தது?