தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் எவ்வளவு?

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் எவ்வளவு?


Corona treatment cost in private hospital

கொரோனா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது தொடர்பாக தமிழக அரசுக்கு இந்திய மருத்துவ கழகம் பரிந்துரை செய்துள்ளது.

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடூர வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. நாடு முழுவதும்  கொரோனா பரவல் கட்டுக்குள் வராமல் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியதால் சில தளர்வுகளுடன் ஐந்தாவது கட்டமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. தமிழகத்திலும் கொரோனா பரவலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது.

இந்தநிலையில், கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கட்டணம் நிர்ணயிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

corona

ஆனால் கொரோனாவுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை தந்து கொண்டிருக்கும் நிலையில், தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கான சிகிச்சைக் கட்டணம் மிக அதிகமாக இருப்பதாகவும் இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கான சிகிச்சை கட்டணம் குறித்து தமிழக அரசுக்கு இந்திய மருத்துவ கழகத்தின் தமிழக பிரிவு பரிந்துரை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் லேசான பாதிப்புள்ள நோயாளிக்கு 10 நாட்கள் சிகிச்சை கட்டணமாக ரூ.2,31,820 வசூலிக்கலாம் அதாவது நாள் ஒன்றுக்கு ரூ.23 ஆயிரம் வரை வசூலிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தீவிர சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு 17 நாட்கள் கட்டணமாக ரூ.4,31,411 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது நாள் ஒன்றுக்கு ரூ.43 ஆயிரம் வரை வசூலிக்கலாம் எனவும், மருத்துவர்கள், தனிமைப்படுத்தப்படும் பணியாளர்களுக்கு ஒருநாள் கட்டணமாக ரூ.9,600 வரை வசூலிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.