சினிமா

2.0. பிரம்மாண்டத்தின் உச்சம்! தெறிக்கவிடும் திரைவிமர்சனம்!

Summary:

two point o movie complete tamil review

பொதுவாக ஹாலிவுட் படங்கள்தான் பிரமாண்டமாக இருக்கும், தமிழ் சினிமாலம் அதன் கிட்டயே நெருங்க முடியாது என நினைத்த காலம் மாறி அந்த ஹாலிவுட் சினிமாவையே நம் பக்கம் திரும்ப வைத்துள்ளது சங்கரின் 2.0 திரைப்படம். ஹாலிவுட்டிற்கே சவால் விடும் இயக்குனர்கள் நம் தமிழ் சினிமாவிலும் இருக்கிறார்கள் என்பதை இனி நாமும் பெருமைப்பட்டு சொல்லிக் கொள்ளலாம்.

தமிழ் சினிமாவை உலக அளவில் தலைநிமிர வைத்த பெருமை 2.0 வை சேரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கற்பனையால் கூட எட்டி பிடிக்கமுடியாத காட்சிகள் ,இதெல்லாம் எப்படி செய்தார்கள் என வியக்க வைக்கும் விஎப்எக்ஸ் காட்சிகள் படம் பார்க்கும் அனைவரும் பிரமித்துப்போகும் அளவில் உளள்து 2.0 திரைப்படம்.

இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டும்தான், வேறு உயிரினங்களுக்கு இடம் இல்லை என்று என்னும் நமது  எண்ணத்தை தூக்கி வீசியுள்ளது இந்த படம். இயக்குனர் ஷங்கர் இதுவரை இயக்கிய படங்களைப் பார்த்தே இந்தியத் திரையுலகம் மிரண்டிருக்கிறது. இப்போது 2.0 படத்தைப் பார்த்த பிறகு இன்னும் அதிசயத்துப் போவார்கள். 2.0.

பறவையியல் வல்லுனரான அக்ஷய்குமார் செல்போன்களை அதிகம் பயன்படுத்துவதால் பறவை இனங்களுக்கு பாதிப்பு வருகிறது என்றும் இதனால் செல்போன் கம்பெனிகளுக்கு குறைவான அனுமதி கொடுக்க வேண்டும் என்றும், அலைவரிசையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கிறார். 

ஆனால், அவரின் கோரிக்கையை ஏற்க அரசு மறுக்கிறது. நீதிமன்றத்தை நாடியும் பயனிலை.  இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறார். அதன்பின் ஆவியாக (?) வந்து பறவைகளின் சக்தியுடன் பறவை மனிதனாக மாறி மக்கள் பயன்படுத்தும் செல்போன்களை காணாமல் போகச் செய்கிறார். 

தன்னை எதிர்த்தவர்களையும் கொலை செய்கிறார் அக்ஷய்குமார். என்ன நடக்கிறது என்று தெரியாமல் குழம்பும் அரசாங்கம் அது பற்றி கண்டுபிடிக்க ரோபோ விஞ்ஞானி ரஜினிகாந்த் அவர்களை நாடுகிறது. அவர்களின் வேண்டுகோள்படி சிட்டி ரோபோவின் 2.0 வெர்ஷனை உருவாக்குகிறார் ரஜினிகாந்த். சிட்டி, பறவை மனிதனை அழித்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

விஞ்ஞானி வசீகரன், சிட்டி 2.0 வெர்ஷன் என ரஜினிகாந்த். வழக்கம் போலவே அவருடைய ஸ்டைலான நடிப்பில் நம்மை பிரமைக்கவைத்துள்ளார். அவர்களை விட கிளைமாக்சில் கொஞ்ச நேரமே வரும் 'கம்ப்ரெஸ்டு வெர்ஷன் 3.0' தனி ஸ்டைலில் அசத்துகிறது. அடுத்து 3.0 எடுப்பதற்கு இப்போதே இயக்குனர் ஷங்கர் ரெடியாகிவிட்டார் போல.


வசீகரனின் பெண் உதவியாளர்தான் நிலா என்கிற ரோபோட். அதுதான் நடிகை எமி ஜாக்சன்.  இந்தப் படத்தில் நிஜ ரேபோட் ஆகவே மாறிவிட்டார் நடிகை எமிஜாக்சன். இப்படி ஒரு வாய்ப்பு எந்த ஒரு தமிழ் நடிகைக்கும், இந்திய நடிகைக்கும் கிடைக்கவில்லையே என்று யோசிக்க வைக்கவில்லை. எமியைத் தவிர இந்தக் கதாபாத்திரத்தில் வேறு யாரும் சிறப்பாக நடித்திருக்க முடியுமா என்று நமக்கு தோன்றும்.

படத்தின் வில்லன் என அக்ஷய்குமாரைச் சொல்ல முடியாது. வெட்டிப் பேச்சுக்கெல்லாம் அடிக்கடி செல்போனைப் பயன்படுத்தும் நாம்தான் வில்லன்கள். செல்போன் பயன்பாட்டைக் குறையுங்கள், பறவைகளையும் வாழவிடுங்கள் என்ற நல்லெண்ணத்துடன் போராடுகிறார் அக்ஷய்குமார். பிளாஷ்பேக்கில் வயதான பறவையியல் வல்லுனராக உருக வைக்கிறார். பின்னர், பறவை மனிதனாக (பேயாக) மாறி உலுக்கி எடுக்கிறார்.

வசீகரன் ரஜினிகாந்தை எதிர்க்கும் சுதன்ஷு பான்டே, அமைச்சர் கலாபவன் ஷாஜோன் ஆகியோர் மற்ற கதாபாத்திரங்களில் குறிப்பிட வைக்கிறார்கள். 

ஏஆர் ரகுமான் பின்னணி இசையில் மேலும் பிரமிப்பூட்டுகிறார். படத்தில் 'புல்லினங்காள்' பாடல் மட்டுமே கொஞ்ச நேரம் வருகிறது. 'எந்திர லோகத்து' பாடலை படம் முடிந்த பின் சேர்த்திருக்கிறார்கள். படம் அதோடு முடிந்தது என எழுந்துவிடாதீர்கள். அதன்பின் ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது.

நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு, ஆண்டனியின் படத் தொகுப்பு, முத்துராஜின் அரங்க அமைப்பு மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் இந்தப் படத்தில் குறிப்பிட வேண்டியவர்கள். குறிப்பாக விஎப்எக்ஸ் வேலையைச் செய்தவர்கள் ஒரு தமிழ்ப் படத்தை ஹாலிவுட்டை மிஞ்சும் அளவிற்குக் கொடுத்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் அது சரியில்லை, இது சரியில்லை என்று சொல்வதைவிட ஒரு தமிழ்ப் படத்தை உலக அளவில் பேச வைக்கும் படமாகக் கொடுத்தற்கு படக்குழுவினரைத் தாராளமாகப் பாராட்ட வேண்டும். இனி, தமிழ் சினிமாவை 2.0 படத்திற்கு முன், பின் எனப் பிரித்துப் பேசுவார்கள்.

'பாகுபலி' படத்தையே பார்த்து பிரமித்த நமக்கு அதைவிட பன்மடங்கு பிரமிப்பை இந்தப் படம் தரும். குழந்தைகளுடன் பார்த்து ரசிக்கலாம்.


Advertisement