சினிமா

அமைதியான ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டோம்! நேரில் சென்று ஆறுதல் கூட சொல்லமுடியவில்லையே!! வேதனையுடன் இரங்கல் தெரிவித்த நடிகர் சிம்பு!

Summary:

Simbu condolences to director swaminathan family

தமிழ்த் திரையுலகில் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவராக இருந்தவர் வி.சுவாமிநாதன். இவர்  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு போராடி வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 10ஆம் தேதி  காலமானார்.  இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான சிலம்பாட்டம் படத்தின்  ஹீரோ சிம்பு தயாரிப்பாளர் சுவாமிநாதனின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தயாரிப்பாளர் சுவாமிநாதன் எனக்கு மிக நெருக்கமானவர். மென்மையான மனிதர். புத்திசாலி. எந்த நேரத்தில் யாரை வைத்து என்ன மாதிரி படம் பண்ண வேண்டும் என்பதில் தெளிவானவர். நட்புக்கு இலக்கணமானவர்.

சிலம்பாட்டம் பட களத்தில் என்னைப் பத்திரமாகப் பார்த்துக் கொண்டவர். இலங்கையில் படப்பிடிப்பு நடைபெற்றது. எனது தேவைகளை அறிந்து சகோதரனைப் போல் நடத்திப் படப்பிடிப்பையும் முடித்து வந்தார். நிறைய நினைவலைகள் உள்ளன. ஆனால், இப்படியொரு சில நாட்களில் விடைபெற்றுச் செல்வாரெனத் தெரியாது. மருத்துவமனை சென்று பார்த்து ஆறுதல் கூட சொல்லமுடியாத ஒரு நோயோடு போராடியிருக்கிறார் என்பது வேதனைக்குரியது.

அஸ்வின் மற்றும் அசோக் அவர்களுக்கு என்றும் எந்தக் காலத்திலும் நாங்கள் உறுதுணையாக இருப்போம். குடும்பத்தின் மீது அக்கறை கொண்ட ஒரு அமைதியான மனிதரை இழந்திருப்பதில் வருத்தமடைகிறேன்.அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், சுற்றத்திற்கும், திரையுலகினருக்கும் என் ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மரணமடைந்த அவரின் ஆன்மா இறைவன் மடியில் இளைப்பாறட்டும் என வேண்டிக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.


Advertisement